முகப்பு
தமிழ்நாடு

தைப் பொங்கல் அன்று மட்டும் தரிசனம்

சிவபெருமானும் ஒரு மரத்தின் உருவில் காட்சி தருகிறார் - தஞ்சை மாவட்டத்தில் உள்ள பரக்கலக்கோட்டை என்னும் இடத்தில்.

Updated On : 7 ஜனவரி 2021, 11:33 am IST
தைப் பொங்கல் அன்று மட்டும் தரிசனம்
பகிர்:

இயற்கையே தெய்வம். மரமும் மலையும் மண்ணும் நீரும் காற்றும் என பஞ்சபூதங்களும் இறைவனின் மயம்தான். நெல்லை மாவட்டத்தில் கருங்குளம் என்ற இடத்தில் ஸ்ரீவிஷ்ணு மரத்தின் வடிவில் காட்சி தருகிறார். இதுபோல், சிவபெருமானும் ஒரு மரத்தின் உருவில் காட்சி தருகிறார் - தஞ்சை மாவட்டத்தில் உள்ள பரக்கலக்கோட்டை என்னும் இடத்தில்.

இங்கே சிவபெருமான் வெள்ளால மரத்தின் வடிவில் காட்சி தருகிறார். அதுமட்டுமா? இந்தத் தலத்தில், சிவபெருமானின் தரிசனத்தை தைப் பொங்கல் திருநாள் அன்று மட்டுமே பகலில் நாம் பெற முடியும். மற்ற நாட்களில் திங்கட்கிழமைகளில் நள்ளிரவு நேரத்தில்தான் கருவறை திறக்கப்படும். தைப் பொங்கல் திருநாளில் சுவாமியை தரிசிப்பதற்காக சூரியன் தன் கிரணங்களால் சுவாமியின் மேனியில் ஒளிபாய்ச்சி வணங்குகிறார்.

அதாவது பகலில் கோயில் நடை திறக்கப்படாமல், ஒவ்வொரு திங்கள்கிழமையும் அதுவும் நள்ளிரவில் மட்டுமே கோயில் திறக்கப்படுகிறது. இங்கு அம்பாள் சன்னதி கிடையாது. சிவபெருமான் வெள்ளால மர வடிவில் காட்சியளிக்கிறார். ஆண்டில் தைப்பொங்கலன்று மட்டுமே அதிகாலையிலிருந்து இரவு 7 மணி வரை நாள் முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்ட பக்தர்களுக்கு இறைவன் காட்சியளிக்கிறார். அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளிக்கதிகள் விழுவதும் சிறப்பாகும்.

Advertisement

Advertisement

இந்தத் தலத்தில் குடியிருக்கும் சிவபெருமானுக்கு பொதுஆவுடையார் என்று பெயர். இந்தப் பெயர்க்காரணம் வந்ததும் வித்தியாசமானதுதான்.

ஒரு முறை வான்கோபர், மகாகோபர் எனும் முனிவர்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்தது. இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா? இதுதான் அவர்களின் வாக்குவாதம். யாரிடம் தீர்ப்பு கேட்பது? எனச் சிந்தித்தபோது, அவர்களுக்குத் தோன்றியவர், மகா விவேகியான பரமேஸ்வரன். இல்லறத்திலும், அதேநேரம் எப்போதும் தியானம் புரிந்தபடி பற்றற்ற வாழ்க்கையை எடுத்துக்காட்டும் பரமேஸ்வரனிடமே தங்கள் சந்தேகத்தைத் தீர்ப்பது என்று முடிவு செய்தனர். சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானிடம் விண்ணப்பித்தனர். அவரோ, இந்தப் பரக்கலக்கோட்டை தலத்தில் காத்திருக்கச் சொன்னார். அதன்படி, ஒரு கார்த்திகை திங்கள்கிழமையில் இங்கே ஒரு வெள்ளால மரத்தின் கீழ் தோன்றி, இல்லறமோ, நல்லறமோ எதுவாயினும் அந்த அறத்தில் வழுவாது வாழ்ந்தால் அதுவே சிறந்தது என்று தீர்ப்பளித்தார். இருவருக்கும் பொதுவாக ஒரு தீர்ப்பு அளித்ததால், இவருக்கு பொதுஆவுடையார், மத்தியபுரீஸ்வரர் என்று திருநாமங்கள் வழங்கலாயிற்று.

இங்கே மரத்தின் வடிவில் காட்சி தருகிறார் பெருமான். அதனால், கருவறை விமானம் என்று எதுவும் இல்லை. மேலும் வழக்கமான சிவாலயங்களில் இருப்பது போல் பரிவார மூர்த்தங்களும் இல்லை. சந்நிதி வெளியே, வீரசக்தி விநாயகர், பெத்தபெருமாள் என ஒரு காவல் தெய்வம் ஆகியோர் சன்னதி கொண்டுள்ளனர். இந்தத் தலத்துக்கு வந்து தீர்ப்பு கேட்ட வான்கோபர் அலங்காரம் கொண்டு இல்லறத்தைக் காட்டியபடியும், மகாகோபர் துறவுக்கோலம் கொண்டும் புளிய மரத்தின் அடியில் சிலை வடிவில் காட்சி தருகின்றனர்.

திங்கள்கிழமை நள்ளிரவு பூஜையின்போது, தரிசனத்துக்காக சன்னதி திறந்ததும், சுவாமியை தரிசிக்க வரும் வயதில் மூத்த ஒருவருக்கு பிரசாதங்கள் கொடுத்து முதல் மரியாதை செய்கின்றனர். அப்போது அவரிடம் ஒரு ரூபாயை காணிக்கையாகப் பெறுகிறார்கள். இதனை, காளாஞ்சி என்பர். பிறகு, பக்தர்களுக்கு சந்தனம், வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுக்கின்றனர். பிறகு அன்னதானம் நடக்கிறது.

இங்கே சிவபெருமான், ரூபமாகவும், அரூபமாகவும், அருவுருவமாகவும் வழிபடப்படுகிறார். சன்னதி திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்புறம், ஒரு பகுதியில் சந்தனக் காப்பு சாற்றப்பட்டு, வஸ்திரங்களை அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தைச் சுற்றிலும் வெண்துணியால் மறைக்கிறார்கள். அப்போது, லிங்க ரூபம் மட்டுமே வெளித் தெரிகிறது. கருவறையில் ஆல மரத்தின் முன் சிவனின் பாதம் பிரதிஷ்டையாகியுள்ளது. இது, பெருமான் முனிவர் இருவருக்குக் காட்சி தந்த அடையாளமாம்

 இரவு 10 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு, 11 மணிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கின்றன. அப்போது திரை இடப்படும். பின் 11.30க்கு மீண்டும் சன்னதி மூடப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்தப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சன்னதி திறக்கப்படுகிறது. அப்போது சுவாமியை நாம் தரிசிக்கலாம். சூரிய உதயத்துக்கு முன் சன்னதி மூடப்பட்டுவிடும். ஆனால், தைப் பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரை நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே நாம் பகலில் சுவாமியை தரிசனம் செய்யலாம்.

 கோயில் அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சன்னதி கதவுக்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. கதவையே சுவாமியாக எண்ணி மாலை சாற்றி வழிபடுகிறார்கள். அந்த வகையில் கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிவபெருமான் ஆலமர அடியில் தரிசனம் தந்ததால் இது தட்சிணாமூர்த்தி திருத்தலமாக, குரு பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. இங்கே பெருமானாகக் கருதப்படும் ஆல மர இலையே பிரசாதமாக அளிக்கப்படும். இந்த இலையை வீட்டில் வைத்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். விவசாய நிலங்களில் வைத்தால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை சோமவாரத்தில் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் என அனைத்து தானியங்களையும், வஸ்திரங்கள், அலங்காரப் பொருட்கள் என அனைத்துப் பொருள்களையும் காணிக்கை செலுத்துகின்றனர். இவற்றைப் பெறுவதற்காகவே, இங்கே பந்தல்கள் போடப்படுகின்றன. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கே மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள்.

கோயில் முகவரி : 
நிர்வாக அதிகாரி
அருள்மிகு பொதுஆவுடையார் திருக்கோயில்,
பரக்கலக்கோட்டை - 614613
தஞ்சாவூர் மாவட்டம்.
தொலைபேசி : 91 - 04373 - 283295
மின்னஞ்சல்: pothuvudaiyartemple@sancharnet.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments