முகப்பு
விளையாட்டு

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சோம்தேவ் - எரிக் புரோடான் மோதல்

சென்னை, டிச.31: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ், தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் எரிக் புரோடானை சந்திக்கிறார். தரவரிசையில் 84-வது இடத்தில் உள்ளார் சோம்தேவ். எரிக் புரோடான் 97-வ

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:41 PM
பகிர்:

சென்னை, டிச.31: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ், தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் எரிக் புரோடானை சந்திக்கிறார்.

தரவரிசையில் 84-வது இடத்தில் உள்ளார் சோம்தேவ். எரிக் புரோடான் 97-வது இடத்தில் உள்ளார். முதல் சுற்றில் சோம்தேவ் வெற்றிபெறும் பட்சத்தில் இரண்டாவது சுற்றில், நடப்புச் சாம்பியன் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்க வேண்டியதிருக்கும். இதனால் சோம்தேவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.

17-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

டிரா: இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் யாருடன் யார் விளையாடுவது என்பதைத் தீர்மானிக்கும் (டிரா) நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் அகில இந்திய டென்னிஸ் சங்க துணைத் தலைவரும், போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவருமான கார்த்தி ப.சிதம்பரம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் எம்.ஏ.அழகப்பன், நடப்புச் சாம்பியன் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ், ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

4 வீரர்களுக்கு நேரடி 2-வது சுற்று: இந்த ஆண்டு டிராவின்படி தரவரிசையில் முன்னணியில் உள்ள நடப்புச் சாம்பியன் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா (17), செர்பியாவின் டிப்சரேவிச் (9), ஸ்பெயினின் அல்மாக்ரோ (10), கனடாவின் மிலோஸ் ரயோனிக் (31) ஆகியோருக்கு முதல் சுற்றில் விளையாடாமல் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 32-லிருந்து 28 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

யூகி பாம்ப்ரி: வைல்டு கார்டு (நேரடித் தகுதி) மூலம் பிரதான சுற்றில் விளையாடவுள்ள இந்தியாவின் யூகி பாம்ப்ரி (346), ஸ்லோவேகியாவின் முன்னணி வீரரான கரோல் பெக்கை (101) சந்திக்கிறார். இதனால் அவருக்கும் முதல் சுற்று கடுமையானதாகவே இருக்கும். ஒருவேளை இந்த ஆட்டத்தில் யூகி வெற்றிபெற்றாலும், 2-வது சுற்றில் இந்தப் போட்டியின் முன்னணி தரவரிசையைக் கொண்டவரான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சை சந்திப்பார். இதனால் யூகி கடுமையான சவாலில் இருந்து தப்ப முடியாது.

விஷ்ணுவர்தன்: தரவரிசையில் 313-வது இடத்தில் உள்ள இந்தியாவின் விஷ்ணுவர்தன், தரவரிசையில் 36-வது இடத்தில் உள்ள முன்னணி வீரரான குரோஷியாவின் இவான் டோடிக்கை சந்திக்கிறார். இதனால் அவருக்கும் முதல் சுற்றே கடினமானதாக அமைந்துள்ளது. விஷ்ணுவர்தனும் வைல்டுகார்டு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஓபனில் கடந்த முறை தகுதிச்சுற்றில் விளையாடி, பிரதான சுற்றுக்கு முன்னேறி சிறப்பாக விளையாடியதன் மூலம் வைல்டுகார்டு பெற்றுள்ள பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் இந்த முறை சகநாட்டு வீரரும், முன்னாள் சாம்பியனுமான சேவியர் மலிûஸ சந்திக்கிறார். கடந்த முறை மலிஸ் இறுதிச்சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

கடும்போட்டி: இந்த முறை ஒற்றையர் பிரிவில் பட்டத்தைக் கைப்பற்றுவதில் நடப்புச் சாம்பியன் வாவ்ரிங்கா, ஜான்கோ டிப்சரேவிச், அல்மாக்ரோ, சேவியர் மலிஸ், மிலோஸ் ரயோனிக் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் இருவர்தான் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே வெற்றிக்கு கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். இரண்டாவது சுற்றுக்கு மேல் முன்னேறுவது என்பது பெரும் போராட்டம்தான்.

இரட்டையர் பிரிவு

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி தங்களது முதல் சுற்றில் பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ்-பிரிட்டனின் கென் ஸ்கப்ஸ்கி ஜோடியைச் சந்திக்கிறது.

இதேபோல் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் ஜோடி தங்களுடைய முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ்- பிலிப்பின்ஸின் டிரீட் கன்ராட் ஹெய் ஜோடியைச் சந்திக்கிறது.

வைல்டுகார்டு பெற்று பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள, தமிழக ஜோடிகளான மோஹித் மயூர்-ராம்குமார் ஜோடி, இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிச்-ஆன்டி ராம் ஜோடியையும், ஸ்ரீராம்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி-ராஜீவ் ராம் ஜோடியையும் சந்திக்

கின்றன.

இரட்டையர் பிரிவைப் பொறுத்தவரையில், பூபதி-போபண்ணா, பயஸ்-டிப்சரேவிச் ஜோடிகளுக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சோம்தேவ்

தனது முதல் சுற்று குறித்து சோம்தேவ் கூறுகையில், "முதல் சுற்றில் என்னை எதிர்த்து விளையாடவுள்ள எரிக் மிகச்சிறந்த வீரர். அதனால் முதல் சுற்றை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டேன். நான் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது.

சென்னை ஓபனோடு அடுத்த ஆண்டை தொடங்குகிறேன். அது எனக்கு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன். சென்னையில் விளையாடுவது உணர்வுபூர்வமானது. இந்த மைதானத்தோடு உணர்வுபூர்வமாக ஒன்றிப்போயிருக்கிறேன். ஏனென்றால் நான் இங்குதான் வளர்ந்தேன். இங்கு நிறைய டென்னிஸ் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவையும் வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.

வாவ்ரிங்கா

"இந்தப் போட்டியில் எப்போதுமே கடுமையான சவால் இருக்கும். இருப்பினும் நான் இங்கு சிறப்பாகவே விளையாடியிருக்கிறேன். கடந்த முறை சிறப்பான ஆட்டத்தை (சாம்பியன் பட்டம் வென்றது) வெளிப்படுத்தினேன். அடுத்த ஆண்டில் ஒலிம்பிக், டேவிஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகள் உள்ளன. சிறப்பான ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன்' என்றார் வாவ்ரிங்கா.

மிலோஸ் ரயோனிக் கூறுகையில், "6 வாரங்களுக்குப் பிறகு நான் விளையாடும் முதல் போட்டி இது. அடுத்த ஆண்டில்சிறப்பாக விளையாடுவதற்கு இந்தப் போட்டி நல்ல அடித்தளமாக அமையும்' என்றார்.

சேவியர் மலிஸ் கூறுகையில், "நான் இங்கு சில முறை வந்துள்ளேன். எல்லா வசதிகளுமே நன்றாக உள்ளது. ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. இது வேறு எங்கும் கிடைக்காது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.