சென்னை ஓபன்: முதல் சுற்றில் வாவ்ரிங்காவை சந்திக்கிறார் போபண்ணா
சென்னை,ஜன.1: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கை சந்திக்கிறார். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான
சென்னை,ஜன.1: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கை சந்திக்கிறார்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்று சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இது 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை ஓபன் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் வாவ்ரிங்காவும், ரோஹன் போபண்ணாவும் தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே வைல்டுகார்டு (நேரடித்தகுதி) மூலம் நேரடித் தகுதிபெற்றவர்கள்.
வாவ்ரிங்கா 2010-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறியவர். கடந்த ஆண்டும் முதல் சுற்றில் போபண்ணா, வாவ்ரிங்காவைத்தான் எதிர்கொண்டார். அந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார். இதனால் போபண்ணாவுக்கு முதல் சுற்றே மிகக் கடினமானதாக அமைந்துவிட்டது.
சோம்தேவ், தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் வீரரை முதல் சுற்றில் சந்திக்கவுள்ளார். மற்றொரு இந்திய வீரர் யூகி பாம்ப்ரியும் தகுதிச் சுற்றில் தேர்ச்சி பெறும் வீரரை எதிர்கொள்கிறார்.
தாமஸ் பெட்ரிச்-பிரடெரிகோ மோதல்
நடப்பு சாம்பியனான செக்.குடியரசின் பெட்ரிச் தாமஸ், போர்ச்சுகலின் பிரெடரிகோ கில்லை சந்திக்கிறார். தாமஸ் சென்னை ஓபன் தரவரிசையில் இப்போது முதல் இடத்தில் உள்ளார். அதனால் அவர் முதல் சுற்றை எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்கட், தகுதிச்சுற்றில் தேர்ச்சி பெறும் வீரரையும், பிரான்ஸின் ஜெர்மி சார்டி ஸ்லோவேகியாவின் பிளாஸ் காவிக்கையும், செர்பியாவின் ஜாங்கோ டிப்சரவ், ஆர்ஜென்டீனாவின் எட்வர்டு ஸ்வாங்கையும் எதிர்கொள்கின்றனர்.
கடந்த ஆண்டு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற பெல்ஜியத்தின் ஷேவியர் மலிஸ், துருக்கியின் இலன் மார்செலை முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்.
யூகி, சோம்தேவ் நம்பிக்கை
யூகி பாம்ப்ரி கூறுகையில், "4-வது முறையாக சென்னை ஓபனில் பங்கேற்கிறேன். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வெயில் அதிகமாக உள்ளது. கடந்த சில நாள்களாக இங்கு பயிற்சி மேற்கொண்டுள்ளேன் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.
சோம்தேவ் கூறுகையில், "பள்ளியில் படித்தபோதே இங்கு வந்து பயிற்சி பெற்றிருக்கிறேன். கடந்த 5 நாள்களாக இங்கு பயிற்சிபெற்று வருவதால் இங்குள்ள காலநிலை எனக்கு பழகிவிட்டது. பயிற்சியின் போது சிறப்பாக ஆடி வருகிறேன். இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.
சோம்தேவ் இரண்டாவது சுற்றில் வாவ்ரிங்கா அல்லது போபண்ணாவை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி, ரோஹன் போபண்ணா ஆகியோருக்கு வைல்டுகார்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதான சுற்று டிரா
முன்னதாக பிரதான சுற்றில் யாருடன் யார் மோதுவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக குலுக்கல் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் அழகப்பன், போட்டி அமைப்புக்குழு தலைவர் கார்த்தி ப.சிதம்பரம், ஐஎம்ஜியின் தெற்காசிய மூத்த துணைத் தலைவர் ரவி கிருஷ்ணன், வீரர்கள் சோம்தேவ், யூகி பாம்ப்ரி, வாவ்ரிங்கா, ரிச்சர்டு காஸ்கட் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலர், வீரர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த சீட்டுகளை எடுத்தனர். பிரதான சுற்றில் 32 வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
தகுதிச்சுற்று: போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று சனிக்கிழமை தொடங்கியது. மைதானத்தில் உள்ள மெயின் கோர்ட்டுகளில் இந்த ஆட்டங்கள் நடைபெற்றன. இதைக் காண சிறுவர்கள், இளைஞர்கள் வந்திருந்தனர்.