சென்னை ஓபன்: 2-வது சுற்றில் யூகி பாம்ப்ரி
சென்னை, ஜன. 2: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் யூகி பாம்ப்ரி. திங்கள்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், தரவரிசையி
சென்னை, ஜன. 2: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் யூகி பாம்ப்ரி.
திங்கள்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், தரவரிசையில் 346-வது இடத்தில் உள்ள யூகி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 101-வது இடத்தில் உள்ள ஸ்லோவேகியாவின் கரோல் பெக்கை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை யூகி எளிதாக வென்றாலும், இரண்டாவது செட்டில் கரோல் பெக் ஓரளவுக்கு சவாலாக விளையாடினார்.
யூகி தனது இரண்டாவது சுற்றில் இந்தப் போட்டியின் முன்னணி வீரரும், தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளவருமான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சை சந்திக்கிறார். இதனால் அந்த சுற்று அவருக்கு கடுமையான சவாலாகவே இருக்கும்.
17-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. பிரதான கோர்ட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி, கரோல் பெக்கை எதிர்கொண்டார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் களமிறங்கிய யூகி பாம்ப்ரி, முதல் செட்டின் 4-வது கேமில் கரோல் பெக்கின் சர்வீûஸ முறியடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு யூகி ஆட்டத்தை தன்வசம் திருப்பினார்.
யூகியின் ஷார்ட்களை எதிர்கொள்ள முடியாமல் கரோல் பெக் தடுமாறினார். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட யூகி 6-வது கேமில் மீண்டும் பெக்கின் சர்வீûஸ முறியடித்தார்.
இதன்மூலம் 5-1 என்ற கணக்கில் அவர் முன்னிலை பெற்றார். 7-வது கேமில் யூகி வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வீûஸ பெக்கிடம் இழந்தார். 8-வது கேமில் அபாரமான சர்வீஸ்களை அடித்தார் பெக்.
இந்த கேமில் ஆரம்பத்தில் பின்தங்கிய யூகி, அதன்பிறகு சரிவிலிருந்து மீண்டார். கடும் போராட்டத்திற்குப் பிறகு பெக்கின் சர்வீûஸ முறியடித்து 6-2 என்ற கணக்கில் வென்று முதல் செட்டை 34 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார் யூகி.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் ஆரம்பத்தில் அபாரமாக ஆடினார் யூகி. இதனால் இரண்டாவது கேமிலேயே கரோல் பெக்கின் சர்வீûஸ முறியடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். 4-வது கேமில் கடுமையாகப் போராடியே சர்வீûஸ தன்வசமாக்கினார் பெக். 6-வது கேமில் அதிரடியாக விளையாடிய யூகி, அந்த செட்டை பெக்கிடம் இருந்து எளிதாகப் பறித்தார்.
இதனால் அவர் 5-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். தோல்வியின் விளிம்பில் இருந்தபோதும், கடுமையாகப் போராடிய பெக், 7-வது கேமில் யூகியின் சர்வீûஸ முறியடித்தார். இருப்பினும் 9-வது கேமை வென்றதன் மூலம் இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் யூகி.
இதன்மூலம் அவர் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் கரோல் பெக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 19 நிமிடங்கள் நடைபெற்றது.
வைல்டுகார்டு (நேரடித் தகுதி) மூலம் பிரதான சுற்றில் விளையாடத் தகுதிபெற்ற யூகி பாம்பரி அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். கடந்த முறையோடு ஒப்பிடும்போது யூகியின் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
அதிரடி சர்வீஸ்கள்: இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இருவருடைய சர்வீஸ்களுமே நல்ல வேகத்தில் வந்தன. கரோல் பெக் அதிகபட்சமாக 195 கி.மீ. வேகத்திலும், யூகி பாம்ப்ரி 185 கி.மீ. வேகத்திலும் சர்வீஸ் போட்டனர்.
விஷ்ணுவர்தன் தோல்வி: மற்றொரு இந்திய வீரர் விஷ்ணுவர்தன் 6-4, 6-7, 1-6 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் இவான் டோடிக்கிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
மற்ற ஆட்டங்கள்: இஸ்ரேலின் டூடி செலா 6-0, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பேபியோ போகினியையும், பிரான்ஸின் பெனாய்ட் பெய்ரே 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பெரே ரிபாவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
சோம்தேவ் விலகல்
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து இந்தியாவின் முன்னணி வீரர் சோம்தேவ் விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியது: தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் அறிவுரையின் பேரிலும், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளேன். இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார்.
சோம்தேவ் தனது முதல் சுற்றில் பிரான்ஸின் எரிக் புரோடானை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால் இப்போது அவர் விலகியிருப்பதால், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் எரிக் புரோடான், சகநாட்டு வீரரான வேஸ்லினுடன் மோதுகிறார்.