நம்பிக்கை சிங்(கம்)
கடும் போராட்டத்துக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் இடம்பிடித்துள்ளார் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். யுவராஜின் இந்த கடுமைய
கடும் போராட்டத்துக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் இடம்பிடித்துள்ளார் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்.
யுவராஜின் இந்த கடுமையான முயற்சி, மற்ற வீரர்களுக்கு மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது. பொதுவாக காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்புவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. காயத்துக்கே இப்படியென்றால், புற்றுநோயிலிருந்து மீண்டு யுவராஜ் சிங் அணிக்குத் திரும்பியிருப்பது சாதனைக்குரிய விஷயம்தான்.
சில நாள்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் மைதானத்தில் கால்தடத்தைப் பதித்து, பேட்டுடன் பயிற்சியைத் தொடங்கிவிட்டார் யுவராஜ் சிங். இப்போது தினந்தோறும் மூன்று மணி நேரம் தன்னால் விளையாட முடிகிறது என்று நம்பிக்கையோடு பேசுகிறார் யுவராஜ்.
Advertisement
அவருடைய அலாதியான நம்பிக்கை, இலங்கையில் நடைபெற இருக்கும் இருபது ஓவர் உலகப் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு எந்தளவுக்கு அவருக்கு உதவும் என்று தெரியாது. ஆனால் உத்தேச அணியில் இடம்பிடிக்க யுவராஜ் சிங் செய்த முயற்சிகள், சாதிக்கத் துடிக்கும் பல வீரர்களுக்கு முன்னுதாரணம்.
பொதுவாக எந்த ஒரு நோயிலிருந்தும் முழுமையாகவும், விரைவாகவும் குணமடைய மருந்துகளை விட மன உறுதி மிகவும் முக்கியம். இதற்கு யுவராஜ் சிங்கே நல்ல முன்னுதாரணம். யுவராஜின் போராட்ட குணமும், மன உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வுமே இப்போது அவர் உத்தேச அணியில் இடம்பிடிக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஏற்ற, இறக்கங்களைக் கண்டவர் யுவராஜ் சிங். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி இந்திய அணியில் தனக்கென நிரந்தர இடத்தைப் பிடித்தவர்.
2007-ல் இருபது ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். 2011 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையைக் கைப்பற்ற முக்கியப் பங்கு வகித்ததோடு, தொடர் நாயகனாகவும் உருவெடுத்தார். ஆனால் அந்த மகிழ்ச்சியை யுவராஜ் கொண்டாடி முடிப்பதற்குள் புற்றுநோய் வடிவில் பேரதிர்ச்சி வந்தது. இதனால் ஆரம்பத்தில் நிலைகுலைந்தாலும், அமெரிக்காவில் சிகிச்சையை முடித்தப் பிறகு தன்னம்பிக்கையுடன் தாயகம் திரும்பினார் யுவராஜ் சிங்.
இந்தியா திரும்பியபோது, புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டது குறித்து யுவராஜ் பேசிய விதம் கேட்பதற்கே சற்று "த்ரில்'லாக இருந்தது. அந்தத் தருணத்திலும் விரைவில் அணிக்குத் திரும்புவேன் என்று நம்பிக்கைத் தளராமல் பேசினார் யுவராஜ். சொன்னபடியே இப்போது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான முதற்கட்ட முயற்சியிலும் வெற்றி கண்டுள்ளார்.
சாதாரண நோய் வந்தாலே பீதியில் உறைந்து உயிரைவிடும் மனிதர்களுக்கு மத்தியில், உயிரைக் கொல்லும் கொடிய நோயாகப் பார்க்கப்படும் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள யுவராஜ் சிங், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமுள்ள புற்றுநோயாளிகளுக்கும், தடையைத் தாண்ட நினைக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சிறந்த முன்னுதாரணம் என்றால் அது மிகையாகாது.
இந்திய அணியில் யுவராஜ் சிங் மீண்டும் விளையாடும் காலம், வெகுதூரத்தில் இல்லை, வெகு அருகில்தான்!