அக்னி பரீட்சையில் கோலி!
தனது அபார ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மூன்றரை ஆண்டுகளில் துணை கேப்டன் பதவியைப் பிடித்துவிட்டார் தில்லியைச் சேர்ந்தவரான 23 வயது விராட் கோலி. துடிப்பு, வேகம், திறமை என சிறப்பாக ஆடி
தனது அபார ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மூன்றரை ஆண்டுகளில் துணை கேப்டன் பதவியைப் பிடித்துவிட்டார் தில்லியைச் சேர்ந்தவரான 23 வயது விராட் கோலி.
துடிப்பு, வேகம், திறமை என சிறப்பாக ஆடி வரும் கோலி, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் துணை கேப்டன் பதவியை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் இப்போதைய கேள்வி. வரும் 12-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்துதான் கோலிக்கு ஆரம்பமாகிறது அக்னி பரீட்சை.
முத்தரப்புத் தொடரில் இலங்கைக்கு எதிராக அவர் ஆடிய அற்புதமான ஆட்டத்தால் அவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் வரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் கோலி.
ராகுல் திராவிடுக்கு இணையாக இப்போது பேசப்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் திராவிடின் ஓய்வுக்குப் பிறகு அந்த இடத்திற்கு கோலி பொருத்தமானவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருப்பது அவருக்கு சுமையாகவே அமையும் என்று முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம், "5 ஆண்டுகளுக்குப் பிறகே கோலிக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் கேப்டனாக்கும் திட்டத்தோடே கோலிக்கு இப்போது துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். கேப்டன் பதவிக்கு கோலி தகுதியானவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்கு தலைமையேற்று கோப்பையை வென்று வந்திருக்கிறார். ஆனால் இப்போதைய சூழலில் மூத்த வீரர்கள் அடங்கிய இந்திய அணியை வழி நடத்தும் அளவுக்கு அவர் முதிர்ச்சியடைந்தவரா என்றால்? நிச்சயம் இல்லை.
அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே துணை கேப்டன் பதவிக்கு ஒரு வீரர் தன்னை தயார்படுத்திக் கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும், வயதளவிலும் போதிய அனுபவம் இல்லாதவர் கோலி. எளிதில் உணர்ச்சி வசப்படுவது கோலியின் கவனிக்கப்பட வேண்டிய பலவீனங்களில் ஒன்று.
சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடுவிரலைக் காட்டி ரசிகர்களை எச்சரித்ததற்காக போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாகக் கட்டினார். கடந்த டிசம்பரில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் ஐ.சி.சி.யால் எச்சரிக்கப்பட்டார்.
இதைவைத்துப் பார்க்கும்போது பிரச்னைகளை சமாளிக்கவோ, அணியை வழிநடத்தும் அளவுக்கோ மனதளவில் கோலி தயாராகவில்லை என்றே தெரிகிறது.
இது மட்டுமின்றி சேவாக், கம்பீர், சுரேஷ் ரெய்னா போன்ற மூத்த வீரர்களை ஓரம் கட்டிவிட்டே, கோலிக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது மூத்த வீரர்களிடையே நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். இப்போதைய இந்திய அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக மூத்தவீரர் என்றால் அது சேவாக்தான். 12 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறார். கம்பீர் 9 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவர்கள் இருவருமே கேப்டன் பதவிக்காக காத்திருந்தவர்கள். இப்போது ஓரம் கட்டப்பட்டிருப்பதால் நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள்.
ஆசிய கோப்பையில் தோனி ஏதாவது பிரச்னை காரணமாக ஓர் ஆட்டத்தில் விளையாட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டால், துணை கேப்டனான கோலி அணியை வழிநடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். அப்போது மூத்த வீரர்களைக் கையாளுவதிலும், கட்டுப்படுத்துவதிலும் கோலி சிக்கலைச் சந்திக்க நேரிடும்.
தன்னுடைய முடிவுகளை மூத்த வீரர்களிடம் தயக்கமின்றி கோலியால் கூற முடியுமா என்றால்? நிச்சயம் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.
அதனால் அது கோலிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையும். முன்வரிசையில் சிறப்பாக ஆடி வரும் நிலையில் இப்படியொரு பொறுப்பான பதவி அளிக்கும்போது போதிய அனுபவமின்மை காரணமாக அவருடைய ஆட்டத்திறனும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படலாம். அதனால் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாமல் போகும்.
எனவே கோலி விஷயத்தில் இப்போது சுமையை ஏற்றாமல் சுதந்திரமாக விளையாடவிடுவது மிக முக்கியமானது. வளர்ந்து வரும் வீரரான அவர் மீது எவ்வித பொறுப்பையும் திணிக்காமல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தவிட்டால், அதன்பிறகு நல்ல வீரராக மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்த நல்ல கேப்டனாகவும் உருவெடுக்க வாய்ப்புள்ளது.
கேப்டன் பதவியால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவே பல நல்ல வீரர்கள் தங்களின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டு இந்திய அணியை விட்டே ஓரம் கட்டப்பட்டார்கள் என்பது பிசிசிஐ-க்கு தெரியாததல்ல. மாபெரும் வீரரான சச்சின், தனது ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாலேயே கேப்டன் பதவியை இரண்டு முறை உதறித்தள்ளினார் என்பதை பிசிசிஐ மறந்துவிட வேண்டாம். கோலியை இப்போது கேப்டன் பதவிக்கு தயார்படுத்துவதைவிட நல்ல வீரராக உருவாக்குவதே முக்கியம்.
எனவே அபரிமிதமான ஆற்றல் கொண்டவரான விராட் கோலியை கவனமாகக் கையாள வேண்டிய கடமையும், பொறுப்பும் பிசிசிஐயின் கையில்தான் உள்ளது!