விளையாட்டு

வீழ்ந்த நட்சத்திரங்கள்!

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணி பட்டியலில் மூத்த வீரர்களான சேவாக், யுவராஜ், கௌதம் கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெறாதது சிறிய ஏமாற்றத்தை அளித்தாலும், ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.

எஸ். ராஜாராம்

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணி பட்டியலில் மூத்த வீரர்களான சேவாக், யுவராஜ், கௌதம் கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெறாதது சிறிய ஏமாற்றத்தை அளித்தாலும், ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.

இவர்களில் யாராவது அணியில் இடம்பெற்றிருந்தால்தான் அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.

விளையாட்டைப் பொருத்தவரையில், கடந்தகாலச் சாதனைகள் அணியில் இடம்பெற்றுத் தராது என்பது, இந்த மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நாயகர்களாக ஜொலித்த இவர்களுக்கு இந்த முறை உத்தேச அணியில்கூட இடம் கிடைக்காதது, இவர்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை ஒரு முடிவை நோக்கி கொண்டுசெல்கிறது என்றுகூடச் சொல்லலாம்.

வயது காரணமாக, சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரால் மீண்டும் அணிக்குத் திரும்புவது மிகக் கடினம் எனக் கணித்திருந்தார் முன்னாள் கேப்டன் கங்குலி. அந்தக் கணிப்பு பலித்துள்ளது.

இவர்கள் 5 பேருமே இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே ஒரு நாள் அணியில் இடம்பிடிக்கவில்லை என்பதே அவர்களது வெளியேற்றத்துக்கான அறிகுறியாகக் கருதப்பட்டது.

உத்தேச அணி அறிவிக்கப்படும் சில தினங்களுக்கு முன்புதான், அணியில் இடம்பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார் சேவாக். ஆனால், இந்த அதிரடி மன்னர் சர்வதேசப் போட்டியில் விளையாடியே ஏறக்குறைய 2 ஆண்டுகள் ஆகிவிட்டதும், உள்ளூர் போட்டிகளில்கூட சோபிக்காததும் இவரது தேர்வுக்கு எதிராக அமைந்துவிட்டன. நிகழாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டாலும், அது கைகொடுக்கவில்லை.

சிறந்த ஃபார்மில் இருந்தால் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாத, ரசிகர்களுக்குப் பிடித்த ஆக்ரோஷமான வீரரான யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை ஏற்ற, இறக்கம் நிறைந்தது. கடந்த உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருதை வென்ற இவர், அதன்பிறகு ஏற்பட்ட புற்றுநோய்த் தாக்குதலால் கிரிக்கெட் வாழ்வில் சரிவைச் சந்தித்தார். நோயின் பிடியில் இருந்து விடுபட்டதும் கடுமையாக முயன்று மீண்டும் அணியில் இடம்பெற்றார். ஆனால், தொடர்ச்சியாக அணியில் இடம்பிடிக்க முடியாததும், கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாததும் அவருக்குத் தடையாக அமைந்துவிட்டன.

அணியில் கேப்டன் தோனிக்கு போட்டியாளராகக் கருதப்பட்டவர் கௌதம் கம்பீர். கடந்த உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் 97 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அதன்பிறகு தொடர்ச்சியாக ஃபார்மை இழந்து அணியில் இடம்பிடிக்கவே சிரமப்பட்டார். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பிறகு ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றாலும் சிறப்பாக ஆடவில்லை. ஐபிஎல் போட்டியில் கேப்டன் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு எதிராக சில வெற்றிகளைப் பெற்ற கம்பீரால், இளம் வீரர்களுடன் அணித் தேர்வில் போட்டியிட முடியவில்லை.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட் (21) வீழ்த்தியவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் அஃப்ரிடியுடன் பகிர்ந்துகொண்டவர் ஜாகீர்கான். இந்த இடதுகை வேகம், அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் "வேகம்' காட்டவில்லை. மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு ஒருநாள் அணியில் விளையாடியவர், அதன்பின் அணியில் இடம்பிடிக்கவேயில்லை. தொடர்ச்சியான மோசமான ஃபார்ம், இவருக்குரிய இடத்தை பறித்துக்கொண்டது. இவரைப் போலவே, ஹர்பஜன் சிங்கும் அணியில் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் ஆகிறது.

இப்போது உத்தேச அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களைவிட, வெளிநாடுகளில், குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி சாதித்த அனுபவம் இந்த 5 பேருக்கும்தான் அதிகம். இருப்பினும், வீரர்களின் தற்போதைய செயல்பாட்டைக் கொண்டே அணி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தேர்வுக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளதால், இவர்கள் தேர்வு செய்யப்படாதது சரியா, தவறா என்ற கேள்வி வலுவிழந்துவிடுகிறது.

கிரிக்கெட் என்றில்லை, எந்த ஒரு விளையாட்டிலும் சச்சின்போல, நல்ல ஃபார்மில் இருக்கும்போதே தான் நினைத்த நேரத்துக்கு ஓய்வை அறிவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்த்துவிடாது. இருப்பினும், சமகாலத்தில் ரசிகர்களை தங்களது ஆட்டங்களால் கொள்ளைகொண்ட இந்த ஹீரோக்களின் இப்போதைய தருணம் இக்கட்டானது, அவர்களது ரசிகர்களுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT