முகப்பு
விளையாட்டு

ரஹானே சதம் 334 ரன்கள் குவித்தது இந்தியா;ஜடேஜா சுழலில் 121 ரன்களில் சுருண்டது தெ.ஆ.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 4 டிசம்பர், 2015 at 7:35 PM
பகிர்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 117.5 ஓவர்களில் 334 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அஜிங்க்ய ரஹானே 215 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன் குவிப்பில் முக்கியப் பங்கு வகித்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது.

தில்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 84 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 89, அஸ்வின் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

Advertisement

இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ரஹானே 180 பந்துகளில் சதமடித்தார். சொந்த மண்ணில் முதல் சதத்தை அடித்த ரஹானேவுக்கு இது 5-வது டெஸ்ட் சதமாகும்.

இதன்பிறகு சற்று  வேகம் காட்டிய ரஹானே, பீயெட் வீசிய 97-வது ஓவரில் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்தியா 296 ரன்களை எட்டியபோது ரஹானே ஆட்டமிழந்தார். 215 பந்துகளில் 127 ரன்களைக் குவித்த அவர் தாஹிர் பந்துவீச்சில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனார். ரஹானே-அஸ்வின் ஜோடி 193 பந்துகளில் 98 ரன்கள் குவித்தது.

இதையடுத்து உமேஷ் யாதவ் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய அஸ்வின் 116 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இது அவருடைய 6-வது அரை சதமாகும். மதிய உணவு இடைவேளையின்போது 113 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய அஸ்வின் 140 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இஷாந்த் சர்மா டக் அவுட்டாக, 117.5 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. உமேஷ் யாதவ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அபாட் 24.5 ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேன் பீயெட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டீன் எல்கர்-டெம்பா பவுமா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவர்களில் 36 ரன்கள் சேர்த்தது. எல்கர் 17 ரன்களிலும், பவுமா 22 ரன்களிலும் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்காவின் சரிவு தவிர்க்க முடியாததானது.

ஜடேஜா-அஸ்வின்-உமேஷ் யாதவ் கூட்டணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆம்லா 3, டூபிளெஸ்ஸி 0, டேன் விலாஸ் 11, அபாட் 4, பீயெட் 5 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் போராடிய டிவில்லியர்ஸ் 78 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து 9-வது விக்கெட்டாக வெளியேறினார். பின்னர் வந்த இம்ரான் தாஹிர் 1 ரன்னில் நடையைக் கட்ட, தென் ஆப்பிரிக்கா 49.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியத் தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதையடுத்து போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

பாலோ ஆன் கொடுக்காத இந்தியா: பாலோ ஆனைத் தவிர்க்க 135 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், தென் ஆப்பிரிக்க அணி அதைவிட 14 ரன்கள் குறைவாக எடுத்தது. எனினும் இந்திய அணி பாலோ-ஆன் வழங்கவில்லை. 3-வது நாளான சனிக்கிழமை இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை ஆடவுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 213 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.