எளிதான இலக்கு. அதைவிடவும் எளிதான பந்துவீச்சு. எனில், அதிரடியாக ஆடுவது என்பது வாஸ்தவம்தான். ஆனால் இந்தளவுக்காக, அதுவும் ஒரு சர்வதேசப் போட்டியில்!
நியூசிலாந்து - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி, 27.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஹென்றி 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதன்பிறகு ஒரு ரன் வேட்டையே நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
மிக மிக எளிதான இலக்கு. களமிறங்கினார்கள் குப்திலும் லதமும். டி20 போட்டியில்கூட யாரும் இப்படி விளாசியிருக்கமுடியாது. சிக்ஸும் ஃபோருமாக அடித்துக்கொண்டே இருந்தார் குப்தில். 2 ஓவரில் 29 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. 3-வது ஓவரில் 27 ரன்கள்! 17 பந்துகளில் 50 ரன்களை எட்டினார் குப்தில். நியூசிலாந்து சாதனை இது.
முதல் 5 ஓவர்களில் 71 ரன்களைக் குவித்தது நியூசிலாந்து. அடுத்த ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடினார் குப்தில். 26 ரன்கள்! இப்படி ரன்களைக் குவித்துக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்? 8.2 ஓவர்களில் மேட்ச் முடிந்தது! 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அட்டகாச வெற்றி!
30 பந்துகளில் 93 ரன்கள் குவித்த குப்தில், ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மொத்தம் ஒன்பது ரன்கள் மட்டுமே ஓடி எடுத்தார். இதர ரன்களெல்லாம் ஃபோர், சிக்ஸரில் வந்தன. 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்!
100 ஓவர்கள் நடக்கவேண்டிய இந்த ஒருநாள் போட்டி, 36 ஓவர்களில் உணவு இடைவேளைக்கு முன்பே முடிந்தது! ஆனாலும், திருவிழா போன்ற ஒரு ஆட்டத்தைப் பார்த்த பார்வையாளர்களுக்கு குறை எதுவும் இருக்குமா என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.