சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று இந்தியா ஏ அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா ஏ அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார். போட்டி தொடங்கும் முன்பு அப்துல் கலாமின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இரு அணி வீரர்களும் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார்கள். தங்கள் கையில் கருப்பு நிறப் பட்டையை (ஆர்ம்பேண்ட்) அவர்கள் அணிந்திருந்தார்கள்.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக புஜாராவும் முகுந்தும் களம் இறங்கினார்கள். புஜாரா 11 ரன்களில் அவுட் ஆனார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தார்கள். காரணம், அடுத்ததாக விராட் கோலி ஆட வருவதால்.
ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் இந்திய ஏ அணியினரால் வேகமாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. 42 பந்துகளைச் சந்தித்த கோலி 16 ரன்களை எடுத்து அகர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்தார். கோலி வந்தவேகத்தில் அவுட் ஆனதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.
உணவு இடைவேளையின்போது, இந்தியா ஏ அணி 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் (9), ஓஜா (0) ஆகியோர் களத்தில் இருந்தார்கள்.
அதற்குப் பிறகும் இந்திய அணியின் திணறல் தொடர்ந்தது. 84 பந்துகளைச் சந்தித்த நமன் ஓஜா, 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தச் சில நிமிடங்களில் கருண் நாயரும் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தமிழகத்தின் பாபா அபரஜித் துரதிர்ஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் 12 ரன்களில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்தப் பந்திலேயே வருண் ஆரோனும் அவுட் ஆனார். பிறகு ஷர்துலும் ஓஜாவும் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்கள். இதனால் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 68.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா ஏ அணியின் சாந்து மிகப் பிரமாதமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி, ஆட்ட நேர முடிவில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் 24, உஸ்மான் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
முதல் இன்னிங்ஸ்:
இந்தியா ஏ அணி - 135 ரன்கள் (கருண் நாயர் 50, கோலி 16, சாந்து 3/25, அகர் 2/23)
ஆஸ்திரேலியா ஏ அணி - 43/0 ( கேமரூன் 24*, உஸ்மான் 13*)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.