உலகின் முன்னணி செஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் மூன்றாவது நார்வே செஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மீண்டும் தோல்வியடைந்தார். இதனால் 10 வீரர்கள் பங்குபெறும் இந்தப் போட்டியில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் ஃபெபியானோ கருணாவுடன் மோதினார் கார்ல்சன். ஏற்கெனவே முதல் சுற்றில் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்ததால் இந்தச் சுற்றில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால், ஃபெபியானோவின் அபாரமான ஆட்டத்தின் முன்பு கார்ல்சனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 45-வது நகர்த்தலின்போது தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். முதலிரண்டு சுற்றுகளிலும் தோற்றதால் மோசமான தொடக்கத்துடன் இந்தப் போட்டியை ஆரம்பித்துள்ளார் கார்ல்சன்.
ஆனந்த் - அனிஷ் கிரியுடனான போட்டி, டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது சுற்றின் முடிவில் ஒரு புள்ளிகள் பெற்றுள்ளார் ஆனந்த். ஒரு போட்டியைத் தவிர நேற்று நடந்த அனைத்துப் போட்டிகளும் டிரா ஆயின. கார்ல்சன் மட்டுமே தோல்வியைச் சந்தித்தார்.
ஃபெபியானோ கருணா, அனிஷ் கிரி, நாகமுரா, டோபலோவ், மேக்ஸிம் வாச்சியர் லாக்ரேவ் ஆகிய 5 வீரர்கள் 1.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்கள். 1 புள்ளியுடன் ஆனந்த் 2-ம் இடத்தில் உள்ளார். இரண்டு தோல்விகளால் ஒரு புள்ளியும் பெறாத கார்ல்சன் கடைசி இடத்தில் உள்ளார்.
இன்று நடக்கும் மூன்றாவது சுற்றில் அலெக்ஸாண்டர் கிரிஸ்சுக்குடன் மோதுகிறார் ஆனந்த். கார்ல்சன், அனிஷ் கிரியைச் சந்திக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.