இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதித்துள்ளார் விராட் கோலி. பல புள்ளிவிவரங்கள் கோலிக்கு மலர்மாலைகள் சூட்டுகின்றன. வெளிநாட்டில் அதுவும் முதல் டெஸ்ட்டில் தோற்றபிறகு மீண்டெழுந்து வந்து இரு டெஸ்டுகளையும் தொடரையும் வென்றிருப்பது இதுவரை எந்த ஒரு இந்திய கேப்டனும் செய்யாத சாதனை. அக்ரஸிவ் என்கிற வார்த்தையை அடிக்கடி உச்சரிக்கும் கோலி, அதைச் செயலிலும் நிரூபித்துவிட்டார்.
இந்த டெஸ்ட் தொடரால் தோனி இந்திய அணியில் இருப்பதே மறந்துவிட்டது. ஆனால் தோனி இன்னும் ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை. அடுத்து நடைபெறுகிற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20, 5 ஒருநாள் போட்டிகளில் அவரே தலைவராக இருப்பார். ஆனால், இப்போது கோலியின் டெஸ்ட் தொடர் வெற்றியால் புதிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் தோனி.
தோனி எப்படியும் அடுத்த உலகக்கோப்பை வரை (2019, இங்கிலாந்து) விளையாடுவார் என்பது நிச்சயமல்ல, தோனியும் அந்த உறுதியைத் தரவில்லை. (இப்போது தோனிக்கு 34 வயது) அதனால் கோலியை டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தலைவராக்குவதுதான் இந்தியத் தேர்வுக்குழுவின் வருங்காலத் திட்டமாக இருக்கும். இது தோனியின் ஓய்வுக்குப் பிறகே நடக்கும் என்பதும் யதார்த்தம். தோனி எப்படியும் இரண்டு வருடங்கள் ஆடுவார் என்று இருந்தால் அதுவரை கோலி பொறுமையாக இருக்கவேண்டியதுதான். ஆனால் சமீபத்திய இரு தொடர்களின் முடிவால் திட்டங்கள் எல்லாம் மாற உள்ளன. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், கத்தி முனையில் நிற்கிறார் தோனி!
வழக்கமாக மற்ற அணிகளில் டெஸ்ட் அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர் கேப்டனாக இருப்பார். ஒருநாள், டி20 அணிகளுக்கு இளம் வீரர் கேப்டனாக இருப்பார். மிஸ்பா உல் ஹக் - அஸார் அலி, குக் - மார்கன் என உதாரணம் சொல்லலாம். ஆனால் இந்திய அணியில் இது தலைகீழாக உள்ளது. இந்திய அணிக்கு இரு கேப்டன்கள் என்பதால் இருவருடைய தலைமைப் பண்புகளையும் ஒப்பிட்டு, போட்டி முடிவுகளை அலசவேண்டியுள்ளது.
வெற்றிக்காக தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவர் கோலி. தோனி இந்தளவு ஆக்ரோஷ மனநிலை கொண்டவர் அல்லர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் தோற்றபோதும் பேட்டிங் ஆர்டரை மாற்றாதவர் என்கிற விமரிசனம் அவர்மீது எப்போதும் உண்டு. மேலும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலேயே தன்னுடைய தலைமைப் பண்பை கோடிட்டுக் காண்பித்துவிட்டார் கோலி. இலங்கை வெற்றி கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இந்தப் பண்புகளோடு சமீபத்திய இரு போட்டிகளின் முடிவுகளையும் ஒப்பிடுவது அவசியமாகிறது.
உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணி வங்கதேசம் சென்றது. அங்கு 1-2 என்ற கணக்கில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது, தோனி தலைமையில். இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம். இந்த அவமானத்துக்கு ஆறுதலாக வந்துள்ளது இலங்கை டெஸ்ட் தொடர் வெற்றி. 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இந்திய அணி. கோலி தலைமையில்.
இந்த இரண்டையும் வைத்துதான் இந்திய கிரிக்கெட்டில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. கோலியே டெஸ்ட், ஒருநாள், டி20 என எல்லா கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கலாமே என்று. அதேசமயம், அவ்வளவு சுலபமாக தோனியை அகற்றிவிடமுடியாது. அவர் விருப்பம், அவர் திட்டம் முக்கியம். தொடர் தோல்விகள் ஏற்பட்டால் மட்டுமே தோனியை அப்பதவியிலிருந்து நீக்கமுடியும். இல்லாவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகியதுபோல அவராகத் தானாக விலகினால் தான் உண்டு.
தோனி அடுத்த இரு வருடம் ஆட ஆசைப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த இரு வருடங்களும் நல்ல முடிவுகளை அவர் காண்பித்தாகவேண்டும். இந்தக் காலத்தில், கோலி கேப்டனாக இருந்திருந்தால் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிற எண்ணம் ரசிகர்களுக்கும் தேர்வுக்குழுவுக்கும் ஏற்படக்கூடாது. டெஸ்ட், ஒருநாள் அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது இந்திய அணிக்கு எந்தளவுக்குப் பலத்தை அளிக்கிறது என்கிற கணக்கு பார்க்கப்பட்டால் அது கோலிக்குச் சாதகமாகவே அமையும். ஏற்கெனவே வங்கதேச ஒருநாள் தொடர் தோல்வி பெரிய அவமானமாகிவிட்டது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி தோற்றுவிட்டால் தோனியின் நிலைமை மிகவும் சிக்கலாகிவிடும். கோலியின் இலங்கை வெற்றியுடன் ஒப்பிட்டு புதிய விமரிசனங்கள் எழும். இந்தியத் தேர்வுக்குழுவுக்கும் அது புதிய யோசனைகளை அளிக்கும். (என். சீனிவாசனுக்கு தோனி நெருக்கமானவர் என்பதையும் மறந்துவிடக்கூடாது.) பேசாமல் கோலியிடம் ஒருநாள் அணியையும் கொடுத்துவிடலாமா என்கிற எண்ணத்தை நிச்சயம் ஏற்படுத்தும். தோனிக்கும் அது கூடுதல் அழுத்தத்தைத் தரும். ஓய்வு பற்றிய கேள்விகள் அதிகரிக்கும்.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தோல்விக்குப் பிறகு தோனியின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி அளித்த பதில்: என்னுடைய கிரிக்கெட்டை நான் மிகவும் அனுபவிக்கிறேன். என்னுடைய தலைமைப்பதவி தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் என்று முன்பே ஊகித்திருந்தேன். ஊடகங்கள் என்னை மிகவும் விரும்புகின்றன. இதுபோன்ற வினாக்கள் தொடர்ந்து கேட்கப்படுவதுண்டு. இந்திய கிரிக்கெட் அணிக்கு என்னால் தான் எல்லாக் கெடுதல்களும் நடக்கின்றன, தலைமைப் பதவியிலிருந்து என்னை நீக்குவதால் இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மை ஏற்படும் என்றால் நான் பதவி விலகத் தயார். வெறும் அணி வீரராக மட்டும் ஆடத் தயார். இந்திய கிரிக்கெட் அணி ஜெயிக்கவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். கேப்டனாக யார் இருக்கிறார் என்பது முக்கியமல்ல. கேப்டன் ஆகவேண்டும் என்பது என் விருப்பமல்ல, அந்தப் போட்டியில் நான் இருந்ததும் இல்லை. என்னிடம் வழங்கப்பட்ட பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது தலைமைப் பதவியை என்னிடமிருந்து பறிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என்றார்.
அப்படிப்பட்ட நிலை உருவாக வாய்ப்புண்டா? கோலி தலைமையில் தோனி வீரராக மட்டும் விளையாடலாம் என்கிற நிலைமை உருவானால் அதை தோனி ஏற்றுக்கொள்வாரா? இந்தக் கேள்விகளுக்கான தேவை தென் ஆப்பிரிக்கா தொடரில் ஏற்படுமா?
இந்த நிலைமையினால் தோனிக்கும் கோலிக்கும் இடையே மோதல்கள் எழ வாய்ப்பில்லை என்று கருதும் அளவுக்கு இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. 2011-12-ல் ஆஸ்திரேலியா தொடரில் கோலி சரியாக ஆடாதபோது அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் தோனி. ஒருநாள் போட்டிகளில் தோனி அணி வெற்றி பெற கோலி எந்தளவுக்கு முக்கியப் புள்ளியாக இருந்தார் என்பதையும் தோனி அறியாதவர் அல்லர். அதனால் தோனி தொடர்புடைய பிரச்னை இன்னும் கவனமாகக் கையாளவேண்டிய ஒன்றாக உள்ளது.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கு அடுத்து இந்திய அணி ஜனவரி 2016-ல் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளது. அங்கு 5 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. 2016 டி20 உலகக்கோப்பையில் தோனி கேப்டனாக இருக்கவேண்டும் என்றால் இந்தத் தொடரில் தோனி கேப்டனாக இருந்தாகவேண்டும். அதற்கு அவர் இந்தியாவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் ஜெயித்துக்காட்டவேண்டும்.
தோனி இதுவரை சந்திக்காத சவால்கள் இல்லை. யோசித்துப் பார்த்தால் வேறு எந்த ஒரு கேப்டனாக இருந்தாலும் பாதியிலேயே வெளியேறியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஒவ்வொரு படியாகத் தாண்டித்தான் பல வெற்றிகளையும் பல கடுமையான சவால்களையும் சந்தித்துள்ளார் தோனி. டி20 - ஒருநாள் உலகக்கோப்பை வெற்றிகள், டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை நெ.1 அணியாக மாற்றியது என உச்சம் தொட்ட தோனி அதற்கு நிகரான தோல்விகளையும் சந்தித்துள்ளார். பல நெருக்கடிகளைத் தாண்டி வந்தவருக்கு இப்போது கோலி வடிவில் புதிய சவால் காத்திருக்கிறது.
வங்கதேச ஒருநாள் தொடரின் தோல்விக்கு அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தோற்றால் தோனியின் தலைமைப் பண்பு மீது பெரிய கேள்வி எழும். டி20 உலகக்கோப்பைக்குத் தலைமை தாங்குவது குறித்து சந்தேகங்கள் எழும். எனவே தெ. ஆ ஒருநாள் தொடர் சோதனையைத் தாண்டிவிட்டால் பிரச்னையில்லை. ஆஸ்திரேலியாவில் தோற்றுப்போனால் அந்த நேரத்தில் உடனடி மாற்றங்கள் இருக்காது. டி20 உலகக்கோப்பைக்கு தோனியே கேப்டனாக இருப்பார்.
எதற்குக் குழப்பங்கள்? தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகளில் ஜெயித்துவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது. 2016 டி20 உலகக்கோப்பை வரை தோனி நிம்மதியாக இருக்கலாம்.
இந்திய கிரிக்கெட்டில் அடுத்தச் சில மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.