விளையாட்டு

பயிற்சியாளர்கள் பற்றாக்குறை: விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் தயக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் போதிய பயிற்சியாளர்கள் இல்லாததால் அதில் சேர்வதற்கு மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் 3-ஆவது முறையாக மாணவர் சேர்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆ. நங்கையார் மணி

தமிழகத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் போதிய பயிற்சியாளர்கள் இல்லாததால் அதில் சேர்வதற்கு மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் 3-ஆவது முறையாக மாணவர் சேர்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 30 விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாணவர்களுக்கு 18 விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தடகளம், கால்பந்து, நீச்சல், ஹாக்கி, வாலிபால், குத்துச்சண்டை, கூடைப்பந்து, கிரிக்கெட், வாலிபால், வாள் வீச்சு, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கபடி, ஹேண்ட்பால் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றன.

மாணவிகளுக்காக 12 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தடகளம், வாலிபால், கால்பந்து, ஹாக்கி, வாள் வீச்சு, ஹேண்ட்பால், இறகுப்பந்து, கபடி, பளுதூக்குதல், டென்னிஸ், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.

மொத்தமுள்ள 30 விளையாட்டு விடுதிகளில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சுமார் 850 மாணவிகள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த விடுதிகளுக்கான நிகழாண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டத் தேர்வு ஏப்ரல் 25}ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஜூன் 17}ஆம் தேதி 2}ஆவது கட்டத் தேர்வு நடத்தியபோதும் அதற்கு மாணவர்களிடையே போதிய வரவேற்பு இல்லை. இதனால், 3-ஆவது கட்டத் தேர்வு ஜூலை 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், நிகழாண்டில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மொத்தமுள்ள 30 விடுதிகளில், 28-இல் 5 முதல் 15 இடங்கள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிகிறது.

சரிவிகித உணவு, தங்குமிடம், சீருடை, பயிற்சி ஆகியவை இலவசமாக கிடைக்கும் நிலையிலும் மாணவர்கள் தயக்கம் காட்டுவதற்கு 2 முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விளையாட்டு விடுதிகளில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சிறந்த பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இல்லாததால், மாணவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதனால், திறமையை நிரூபிக்கத் தவறியதாக கூறி, மாணவர்களை இடையிலேயே விடுதியிலிருந்து வெளியேற்றி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, விளையாட்டு பயிற்றுநர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியது: தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் சுமார் 80 பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், விளையாட்டில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் விடுதியில் சேரும் மாணவர்கள், மாலுமி இல்லாத கப்பலைப் போல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு முக்கியத்துவம் அளிக்காத விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாணவர்கள் அதிக வெற்றிகளை குவிக்கவேண்டும் என்பதில் கண்டிப்புடன் செயல்படுகிறது. கடந்த ஆண்டில் சாதிக்கத் தவறிய சுமார் 50 மாணவர்கள், பல்வேறு விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

விளையாட்டு விடுதியை நம்பி வெளியூர் செல்லும் மாணவர்கள், படிப்பைத் தொடர்வதற்கு தனியார் விடுதிகளில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே இந்தாண்டு விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT