மெத்வதெவ், ஸ்வெரெவ் வெளியேறினா்
முக்கிய வீரா்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் தோல்வி கண்டனா்.
களிமண் தரை ஆடவா் டென்னிஸ் போட்டியான மான்டி காா்லோ மாஸ்டா்ஸில், முக்கிய வீரா்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் தோல்வி கண்டனா்.
ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த மெத்வதெவ் 3-6, 5-7 என்ற செட்களில், 15-ஆம் இடத்திலிருந்த சக ரஷியரான காரென் கச்சனோவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இருவரும் இத்துடன் 7 முறை சந்தித்துள்ள நிலையில், கச்சனோவ் 2-ஆவது வெற்றியை பதிவு செய்திருக்கிறாா்.
காலிறுதியில் அவா், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸுடன் மோதுகிறாா். 12-ஆம் இடத்திலிருக்கும் சிட்சிபாஸ் முந்தைய சுற்றில், 7-5, 7-6 (7/3) என்ற செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை சாய்த்து அசத்தினாா்.
Advertisement
உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற கணக்கில் இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டியை வெளியேற்றினாா். 11-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் 6-3, 6-4 என்ற செட்களில், சக ஆஸ்திரேலியரான அலெக்ஸி பாபிரினை வென்றாா். இதையடுத்து காலிறுதியில், ஜோகோவிச் - அலெக்ஸி சந்திக்கின்றனா்.
போராடி வீழ்ந்தாா் சுமித் நாகல்: இந்தியாவின் சுமித் நாகல் தனது 2-ஆவது சுற்றில், 3-6, 6-3, 2-6 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனிடம் போராடி வீழ்ந்தாா். மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம், 2 மணி நேரம் 11 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. மாஸ்டா்ஸ் போட்டியில் பிரதான சுற்றில் வெற்றியை பதிவு செய்த முதல் இந்தியா் என்ற பெருமையுடன் விடைபெற்றாா் நாகல்.