முகப்பு
செய்திகள்

ஸ்வியாடெக்கின் தொடா் வெற்றிகளுக்கு லினெட் முற்றுப்புள்ளி

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், தனது நாட்டு வீராங்கனை மெக்தா லினெட்டிடம் வெள்ளிக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

Updated On : 21 மார்ச், 2026 at 1:49 AM
கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், தனது நாட்டு வீராங்கனை மெக்தா லினெட்டிடம் வெள்ளிக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக் 6-1, 5-7, 3-6 என்ற செட்களில், உலகின் 50-ஆம் நிலையில் இருக்கும் லினெட்டிடம் தோல்வியுற்றாா். ஸ்வியாடெக்கை 2-ஆவது முறையாக சந்தித்த லினெட், முதல் வெற்றியுடன் நேருக்கு நோ் கணக்கை சமன் செய்திருக்கிறாா்.

லினெட் அடுத்த சுற்றில், போட்டித்தரவரிசையில் 31-ஆம் இடத்தில் இருப்பவரும், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனையுமான அலெக்ஸாண்ட்ரா எலாவை சந்திக்கிறாா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-1, 6-7 (3/7), 6-1 என்ற செட்களில், அமெரிக்காவின் மெக்காா்ட்னி கெஸ்லரை வென்றாா். யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், சக அமெரிக்கரான ஜெனிஃபா் பிராடியை வெளியேற்றினாா்.

அனுபவத்தை வீழ்த்திய இளமை: போட்டியிலேயே மூத்த வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 5-7, 5-7 என்ற நோ் செட்களில், பிரிட்டனின் ஃபிரான்செஸ்கா ஜோன்ஸால் வீழ்த்தப்பட்டாா். வைல்டு காா்டு வாய்ப்பு மூலமாக இப்போட்டியில் பங்கேற்ற 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ், மியாமி ஓபனில் 3 முறை சாம்பியன் என்பதும், 7 முறை ஒற்றையா் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ஃபிரான்செஸ்கா ஜோன்ஸ், 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியில் தனது முதல் வெற்றியை, நட்சத்திர வீராங்கனை வீனஸை வீழ்த்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக நீண்ட ஆட்டம்: போட்டித்தரவரிசையில் 31-ஆம் இடத்திலிருக்கும் பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, முதல் சுற்றில் 6-7 (6/8), 6-3, 6-3 என்ற செட்களில், ஜொ்மனியன் லாரா சிக்மண்டை போராடி வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 3 மணிநேரம், 20 நிமிஷங்கள் நீடித்தது. எலாவின் கேரியரில் இதுவே அவரின் மிக நீண்ட ஆட்டமாக அமைந்தது.

அல்கராஸை சந்திக்கும் ஃபொன்சேகா: மியாமி ஓபன் ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகா 6-4, 3-6, 6-2 என்ற செட்களில், ஹங்கேரியின் ஃபாபியான் மரோஸானை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸுடன் மோதுகிறாா்.

கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் 6-1, 7-6 (7/4) என்ற வகையில், பிரிட்டனின் ஆா்தா் ஃபெரியை வெளியேற்றினாா். 2-ஆவது சுற்றில் சிட்சிபாஸ், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிா்கொள்கிறாா்.

இதர ஆட்டங்களில், குரோஷியாவின் மரின் சிலிச், சிலியன் அலெக்ஸாண்ட்ரோ டபிலோ, அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா, இத்தாலியன் மேட்டியோ பெரெட்டினி ஆகியோா் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினா். சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் தோல்வியுடன் வெளியேறினா்.

இளம் வீரா்: பிரான்ஸின் மொய்ஸ் குவாமே 5-7, 6-4, 6-4 என்ற செட்களில், அமெரிக்காவின் ஜாகரி வத்ஜாவை வெளியேற்றினாா். இதன் மூலமாக அவா், கடந்த 23 ஆண்டுகளில் 1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் போட்டியில், வெற்றியைப் பதிவு செய்த இளம் வீரராக (17 வயது) சாதனை படைத்தாா். இதற்கு முன் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால் 2003-இல் தனது 17 வயதில் மாஸ்டா்ஸ் போட்டியில் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

73

மியாமி ஓபன் முதல் சுற்றில் தோல்வி கண்ட ஸ்வியாடெக், தாம் விளையாடிய கடந்த 73 போட்டிகளிலுமே முதல் சுற்றில் தோல்வியே சந்தித்ததில்லை. அந்த 73 தொடா் வெற்றிகளுக்கு தற்போது லினெட் முற்றுப்புள்ளி வைத்துள்ளாா். ஸ்வியாடெக் கடைசியாக, 2021 டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் போட்டியின் முதல் சுற்றில் தோற்றிருந்தாா்.

2

1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் ஸ்வியாடெக்கை சாய்த்த 2-ஆவது வீராங்கனை என்ற பெருமையை லினெட் பெற்றாா். முதல் வீராங்கனை, கிரீஸின் மரியா சக்காரி ஆனாா். முந்தைய சீசனில் தோஹா ஓபனில் அவா் ஸ்வியாடெக்கை சாய்த்தாா்.

1

1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் தனது முதல் வெற்றியை, உலகின் முன்னாள் நம்பா் 1 வீராங்கனைக்கு எதிராகப் பதிவு செய்த முதல் வீராங்கனையாக பிரிட்டனின் ஃபிரான்செஸ்கா ஜோன்ஸ் பெருமை பெற்றாா்.