எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி, "பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் ஸ்பெயினை வென்று (3-2) உலகக் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. இந்திய அணி ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடந்த நவ. 28-ஆம் தேதி, சென்னை, மதுரையில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.
மொத்தம் 24 நாடுகள் முதன்முறையாக பங்கேற்ற இப்போட்டியில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அரையிறுதியில் ஜெர்மனி-இந்தியாவையும், ஸ்பெயின்-ஆர்ஜென்டீனாவையும் வென்றன.
8-ஆவது முறை சாம்பியன்: சென்னையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி "பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் ஸ்பெயினை 3-2 கோல் கணக்கில் வென்றது.
போட்டியின் வரலாற்றில் ஜெர்மனிக்கு இது 8-ஆவது வெற்றிக் கோப்பையாகும்.
இதற்கு முன் அந்த அணி 1982, 1985, 1989, 1993, 2009, 2013, 2023 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனாகியுள்ளது.
முன்னதாக இந்த அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் ஜெர்மனிக்காக ஜஸ்டஸ் வார்வெங் 25-ஆவது நிமிஷத்தில் கோலடித்தார். இதனால் முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.
2-ஆவது பாதியின் தொடக்கத்திலேயே (32') ஸ்பெயினுக்காக நிகோலஸ் மஸ்டரோஸ் ஸ்கோர் செய்ய, ஆட்டம் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னர் வழங்கப்பட்ட எக்ஸ்ட்ரா டைமிலும் உரிய முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பு கையாளப்பட்டது. அதில் ஜெர்மனி 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஷூட் அவுட் வாய்ப்பில் ஜெர்மனி தரப்பில் ஜோனஸ் வோன் ஜெர்சம், ஜஸ்டஸ் வார்வெக் ஆகியோர் கோல் வாய்ப்பை தவறவிட, பெனெடிக்ட் ஜெயர், அலெக் வோன் ஷ்வெரின், பென் ஹாஸ்பச் ஆகியோர் ஸ்கோர் செய்தனர். ஸ்பெயின் அணியில் பாப்லோ ரோமன், ஜுவான் பிராடோ ஸ்கோர் செய்ய, பெரெ அமட், அலெக்ஸ் போஸல், ஆண்ட்ரெஸ் மெடினா வாய்ப்பை வீணடித்தனர்.
இந்தியாவுக்கு வெண்கலம்: இந்நிலையில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும்-ஆர்ஜென்டீனாவும் மோதின. முன்னாள் சாம்பியன்களான இரு அணிகளும் தொடக்கம் முதலே கோலடிப்பதில் முனைப்புடன் ஆடின. ஆட்டம் தொடங்கிய 3-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனா வீரர் ரோட்ரிக்ஸ் நிகோலஸ் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். அதன்பின்னர் இரு அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இரண்டாம் பாதியில் 44-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனா வீரர் பெர்னாண்டஸ் பீல்ட் கோலடித்து முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய வீரர்கள் பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றனர். இதற்கு பலன் கிடைத்தது.
49-ஆவது நிமிஷத்தில் பால் அங்கித், 52-ஆவது நிமிஷத்தில் மன்மித் சிங் ஆகியோர் பெனால்டி கார்னரை கோலாக்கி சமன் செய்தனர்.
தொடர்ந்து 57-ஆவது நிமிஷத்தில் திவாரி சாரதானந்த் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் கோலடித்தார். அடுத்த நிமிஷத்திலேயே எக்கா அன்மோல் பெனால்டி கார்னர் வாய்ப்பை பிசகின்றி கோலாக்கினார்.
இந்திய அணியினர் வீறு கொண்டு ஆடி இரண்டாம் பாதியில் நான்கு கோல்களை அடித்து வெண்கலத்தை வசப்படுத்தினர்.
பெல்ஜியத்துக்கு 5-ஆம் இடம்: 5-6 ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் ஷூட்அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தியது. முதல் பாதியில் 2-1 என பெல்ஜியம் முன்னிலை வகித்தது. ஆட்ட நேர முடிவில் 3-3 என சமநிலை ஏற்பட்டதால், ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 5-ஆவது இடத்தை பெல்ஜியம் பெற்றது.
பிரான்ஸýக்கு 7-ஆம் இடம்: 7-8 இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-நியூஸிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தது. மூன்றாம் செஷனில் பிரான்ஸ் மேலும் ஒரு கோலை அடித்தது. கடைசி செஷனில் 59-ஆவது நிமிஷத்தில் நியூஸி. வீரர் எல்ம்ஸ் ஜோன்டி பீல்ட் கோலடித்தார்.
ஆட்டம் முடிய ஒரே நிமிஷ நேரத்தில் பிரான்ஸ் வீரர் கேலியர்ட் டாம் பீல்ட் கோலடித்தார். இறுதியில் 4-1 என வென்ற பிரான்ஸ் 7-ஆம் இடத்தைப் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.