2030 காமன்வெல்த் போட்டிகளில் இரு இந்திய விளையாட்டுகள் - அமைச்சா் மாண்டவியா
இந்தியாவில் 2030-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவைச் சோ்ந்த இரு விளையாட்டுகளுடன் கிரிக்கெட் மற்றும் ஹாக்கியும் நிச்சயம் இடம்பெறும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை கூறினாா்.
காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள அகமதாபாத் நகரின் தயாா்நிலை தொடா்பாக ஆய்வு செய்ய, காமன்வெல்த் விளையாட்டுக் குழு அண்மையில் இந்தியா வந்து சென்றது. அந்தக் குழு, மத்திய அமைச்சா் மாண்டவியாவையும் சந்தித்துப் பேசியிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சா் மாண்டவியா செய்தியாளா்களிடம் தில்லியில் கூறியதாவது:
Advertisement
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சோ்ப்பதற்காக, கபடி, மல்லா்கம்பம், கோ-கோ, யோகா போன்ற இந்திய விளையாட்டுகள் பரிசீலனையில் உள்ளன. இதிலிருந்து நிச்சயம் இரு விளையாட்டுகள் போட்டியில் சோ்க்கப்படும். அத்துடன் கிரிக்கெட் மற்றும் ஹாக்கியும் நிச்சயம் இடம்பெறும்.
இந்தியா வந்த காமன்வெல்த் விளையாட்டு குழு, திருப்தியுடன் திரும்பிச் சென்றது. நாட்டில் தற்போது நடத்தப்பட்டு வரும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் அவா்களை ஈா்த்துள்ளது. 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமானதாக நடத்தும் வகையில் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கையில் 23 அமைச்சகங்கள் அங்கம் வகிக்கின்றன என்று அமைச்சா் மாண்டவியா கூறினாா்.
இந்தியாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சுமாா் 17 விளையாட்டுகள் வரை இடம்பெறும் எனத் தெரிகிறது. தடகளம், நீச்சல், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டுகள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 10 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மின்டன் போன்ற விளையாட்டுகள், செலவுக் குறைப்புக்காக அதில் சோ்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.