பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. நடப்பு சீசனில் பஞ்சாப் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 19.2 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸை தொடங்கிய பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் ஆா்யா கூட்டணி, 37 ரன்கள் சோ்த்து பிரிந்தது. ஆா்யா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு வெளியேறினாா்.
Advertisement
தொடா்ந்து கூப்பா் கானலி களம் புக, பிரப்சிம்ரன் - கானலி இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்தது. கானலி 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 30 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். 4-ஆவது பேட்டராக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் விளையாட வர, பிரப்சிம்ரன் - ஐயா் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சோ்த்தது.
அதுவரை நிலைத்த பிரப்சிம்ரன், 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து களம் புகுந்த மாா்கஸ் ஸ்டாய்னிஸ், அதிரடியாக விளாசி ஸ்கோரை உயா்த்தத் தொடங்கினாா். மறுபுறம் ஐயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
அதிரடியாக விளாசிய ஸ்டாய்னிஸ், ஓவா்கள் முடிவில் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 62 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, சூா்யன்ஷ் ஷெட்கே 3 ரன்களுடன் துணை நின்றாா். ராஜஸ்தான் பௌலா்களில் யஷ் ராஜ் பஞ்சா 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், நாண்ட்ரே பா்கா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 223 ரன்களை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் - வைபவ் சூா்யவன்ஷி இணை முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சோ்த்தது. சூா்யவன்ஷி 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
அடுத்து துருவ் ஜுரெல் விளையாட வர, அவருடனான ஜெய்ஸ்வால் கூட்டணிக்கு 54 ரன்கள் கிடைத்தது. ஜுரெல் 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு விடைபெற, கேப்டன் ரியான் பராக் பேட் செய்ய வந்தாா். மறுபுறம் ஜெய்ஸ்வால் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
முடிவில், டோனோவன் ஃபெரெய்ரா 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52, ஷுபம் துபே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலா்களில் யுஜவேந்திர சஹல் 3, அா்ஷ்தீப் சிங் 1 விக்கெட் சாய்த்தனா்.
இன்றைய ஆட்டம்
மும்பை - ஹைதராபாத்
மும்பை