அரையிறுதி: முதல் பந்திலேயே ரெவ்யூவை இழந்த இந்திய அணி!
இதனால் இந்திய அணி ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரெவ்யூவை இழந்தது...
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து மோதுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய குல்தீப் யாதவுக்குப் பதிலாக சஹால் இடம்பெற்றுள்ளார். நியூஸிலாந்து அணியில் செளதிக்குப் பதிலாக ஃபெர்குசன் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். கப்தில் முதல் பந்தை எதிர்கொண்டபோது அது அவர் காலில் பட்டது. இதனால் புவனேஸ்வர் உள்பட இந்திய வீரர்கள் எல்பிடபிள்யூ அவுட் கேட்டார்கள். ஆனால் நடுவர் மறுத்துவிட்டார். இதனால் டிஆர்எஸ் முறையீடு குறித்து கோலி, தோனி உள்ளிட்ட அணி வீரர்கள் விவாதித்தார்கள். சரியாக கால அளவு முடிவும் தருணத்தில் டிஆர்எஸ் கோரினார் கோலி.
பந்து பேட்டில் படவில்லையென்றாலும் லெக் ஸ்டம்பைத் தவறவிட்டது. இதனால் இந்திய அணி ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரெவ்யூவை இழந்தது.
இதற்குப் பிறகு மிகவும் பாதுகாப்பு உணர்வுடன் ஆடினார்கள் நியூஸிலாந்து வீரர்கள். முதல் ரன்னை எடுக்கவே அவர்களுக்கு 17 பந்துகள் வரை தேவைப்பட்டன. 14 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்த கப்தில், பும்ரா பந்துவீச்சில் ஸ்லிப் பகுதியில் இருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
நியூஸிலாந்து அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.