கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை: ஆச்சர்யப்படுத்தும் புள்ளிவிவரங்கள்

எழில்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து, 47 ஓவர்களில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இங்கிலாந்து அணியின் எதிர்பாராத தோல்வியினால் உலகக் கோப்பைப் போட்டி சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இலங்கை அணியின் திடீர் விஸ்வரூபம் போட்டியைப் பரபரப்பாக்கியுள்ளது. இதனால் அடுத்து வரும் லீக்  ஆட்டங்கள் முக்கியத்துவம் அடைந்துள்ளன.

இந்த ஆட்டம் தொடர்பான புள்ளிவிவரங்கள்:

* இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடும் அணிகளுடன் விளையாடிய கடைசி 12 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற வெற்றி அது. பெரிய அணிகளுடன் இலங்கை அணி கடைசியாக கடந்த வருடம் அக்டோபரில் வெற்றி பெற்றது, இங்கிலாந்து அணிக்கு எதிராக. 

* உலகக் கோப்பைப் போட்டிகளில் இலங்கையுடன் விளையாடிய கடைசி 4 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோற்றுள்ளது. 1999-ல் இலங்கையை வென்றபிறகு இங்கிலாந்தால் அந்த அணியை வெல்ல முடியவில்லை. 1999 வரை உலகக் கோப்பை ஆட்டங்களில் இலங்கைக்கு எதிராக 7-ல் ஆறில் வென்றுள்ளது இங்கிலாந்து. அதன்பிறகு இலங்கையின் ஆதிக்கம் தான். 

* 2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு 275 ரன்களுக்குக் குறைவான இலக்கை 24 முறை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, இருமுறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 2016-ல் வங்கதேசத்துக்கு எதிராக 238 ரன்களை அடைய முடியாமல் தோற்றது. நேற்று இலங்கை அடித்த 232 ரன்களை எட்ட முடியாமல் தோற்றது. 

* 2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு உள்ளூரில் 275 ரன்களுக்கு குறைவான இலக்கை ஒவ்வொரு முறையும் அடைந்துள்ளது இங்கிலாந்து அணி. 13 ஆட்டங்களில் நேற்றுதான் முதல்முறையாகத் தோற்றுள்ளது. 

* உள்ளூரில் முழுவதுமாக நடைபெற்ற ஒருநாள் ஆட்டங்களில் 233 என்கிற இலக்கை அடைய முடியாத நிலைமை கடந்த 11 வருடங்களில் முதல்முறையாக இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது. 

* இந்த உலகக் கோப்பைப் போட்டிக்கு வரும் முன்பு பாகிஸ்தான் தொடர்ச்சியாக 10 ஒருநாள் ஆட்டங்களிலும் இலங்கை அணி ஆடிய 9 ஆட்டங்களில் 8 ஆட்டங்களில் தோற்றும் இருந்தன. இந்த இரு அணிகளுடமும் இங்கிலாந்து அணி தற்போது தோற்றுள்ளது.  

* 6 ஆட்டங்களில் 8 புள்ளிகள் எடுத்து 3-ம் இடத்தில் உள்ளது இங்கிலாந்து அணி. இப்போது பெரிய பிரச்னையில்லைதான். ஆனால், அடுத்ததாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய அணிகளைச் சந்திக்கிறது இங்கிலாந்து அணி. கடந்த 27 வருடங்களில் இந்த மூன்று அணிகளையும் உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதில்லை. இதனால் லீக் சுற்றின் கடைசிக் கட்டத்தில் நெருக்கடியைச் சந்தித்துள்ளது இங்கிலாந்து அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT