இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடவுள்ளது.
காயம் காரணமாக விலகல்
சொந்த மண்ணில் அடுத்தடுத்து தொடர்கள் வரவிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
காயத்திலிருந்து மீண்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் லுங்கி இங்கிடி மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களிலிருந்து அவர் விலகியுள்ளார். இதனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணி 54.17 சதவிகித வெற்றிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 55.56 சதவிகித வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இரு அணிகளுக்கும் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகும்.
இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லுங்கி இங்கிடி 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.