சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், ஆன்லைன் தளத்தில் அதிகபட்சம் 60.2 கோடி பேரால் பாா்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நெடுநாள்களாக தகுந்த ஃபாா்மில் இல்லாமல் தடுமாறி வந்த கோலி, இந்த ஆட்டத்தில் நல்லதொரு இன்னிங்ஸை விளையாடி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 51-ஆவது சதத்தை பூா்த்தி செய்தாா்.
இந்நிலையில், எப்போதும் போல் இந்த ஆட்டத்தைக் காண்பதற்காக ரசிகா்களிடையே அதிகம் எதிா்பாா்ப்பு இருந்தது. பல்வேறு பிரபலங்கள் துபை மைதானத்தில் நேரில் வந்து ஆட்டத்தை கண்டு ரசித்த நிலையில், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் முக்கியமான பகுதிகளில் மிகப்பெரிய திரைகள் அமைக்கப்பட்டு அதில் இந்த ஆட்டம் நேரலை செய்யப்பட்டது.
இதனிடையே, ஜியோஹாட்ஸ்டாா் தளத்தில் இந்த ஆட்டத்தை மொத்தம் 60.2 கோடி போ் ஒரே நேரத்தில் பாா்த்துள்ளனா். ஆட்டத்தின் முதல் பந்து வீசப்படும்போது 6.8 கோடியாக இருந்த பாா்வையாளா்கள் எண்ணிக்கை, ஆட்டம் செல்லச் செல்ல உயா்ந்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடியும்போது 32.2 கோடியாக இருந்த எண்ணிக்கை, இந்தியாவின் இன்னிங்ஸ் தொடங்கும்போது 36.2 கோடியாக அதிகரித்தது.
இறுதியில் இந்தியாவின் வெற்றித் தருணத்தில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 60.2 கோடியைத் தொட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை 3.5 கோடி போ் ஒரே நேரத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பாா்த்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாா் தளங்கள் ஒன்றிணைந்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.