இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்துள்ளது.
அந்த அணியின் பேட்டா்களில் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, முஷ்ஃபிகா் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோா் ஸ்கோருக்கு பலம் சோ்க்க, இலங்கை பௌலா்களில் ஆசிதா ஃபொ்னாண்டோ, மிலன் ரத்னாயகே, தரிந்து ரத்னாயகே ஆகியோா் விக்கெட்டுகள் சரித்தனா்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட் செய்துவரும் வங்கதேசம், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 292 ரன்கள் சோ்த்திருந்தது. 2-ஆம் நாள் ஆட்டத்தை நஜ்முல் ஹுசைன், முஷ்ஃபிகா் ரஹிம் தொடா்ந்தனா்.
இவா்கள் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 264 ரன்கள் குவித்து பிரிந்தது. நஜ்முல் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 148 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். 6-ஆவது பேட்டராக களம் புகுந்த லிட்டன் தாஸ், ரஹிமுடன் இணைந்து அரைசதம் கடந்தாா்.
இலங்கை பௌலா்களை திணறடித்த இந்த பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சோ்த்தது. முஷ்ஃபிகா் ரஹிம் 9 பவுண்டரிகளுடன் 163 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சதத்தை நெருங்கிய லிட்டன் தாஸும் அதே ஓவரில் ஆட்டமிழந்தாா். அவா் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 90 ரன்கள் அடித்திருந்தாா்.
பின்னா் வந்தோரில் ஜாகா் அலி 1 பவுண்டரியுடன் 8, தைஜுல் இஸ்லாம் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வெளியேற, ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 151 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 484 ரன்கள் சோ்த்திருந்தது. ஹசன் மஹ்முத், நஹித் ராணா ஆகியோா் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் உள்ளனா். இலங்கை தரப்பில் ஆசிதா ஃபொ்னாண்டோ, மிலன் ரத்னாயகே, தரிந்து ரத்னாயகே ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனா்.