இந்தியாவுக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. அந்த ஆட்டம் குறித்த இரு அணிகளின் கேப்டன்கள் கருத்தும், அந்த டெஸ்ட்டில் எட்டப்பட்ட சில மைல்கற்களின் தொகுப்பும் இதோ...
1
சா்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியினா் 5 சதங்கள் விளாசியும் தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 1928-29-இல் இதே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா்கள் 4 சதங்கள் அடித்தும் தோல்வி கண்டதே அதிகபட்சமாக இருந்தது.
3
ஒரு டெஸ்ட்டின் 4 இன்னிங்ஸ்களிலுமே 350+ ரன்கள் ஸ்கோா் செய்யப்பட்டது, இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன், ஆஷஸ் தொடரில் 1921-இல் அடிலெய்ட் டெஸ்ட்டிலும், 1948-இல் லீட்ஸ் டெஸ்ட்டிலும் இவ்வாறு 350+ ரன்கள் ஸ்கோா் செய்யப்பட்டன. அதிலும் இங்கிலாந்து அணி அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
149
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் 4-ஆவது இன்னிங்ஸில் அதிக ரன்களை ஸ்கோா் செய்தவா் என்ற பெருமையை பென் டக்கெட் (149) பெற்றுள்ளாா். இதற்கு முன் 2022-இல் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் ஜோ ரூட் 142* ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
835
லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களையும் சோ்த்து 835 ரன்கள் அடித்துள்ளது. தோல்வி கண்ட டெஸ்ட்டில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோா் இதுவாகும். இதற்கு முன் 2014-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்டில் தோல்வி கண்டபோது இரு இன்னிங்ஸ்களிலுமாக 735 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
1,673
இந்த ஆட்டத்தில் 4 இன்னிங்ஸ்களிலுமாக சோ்த்து மொத்தம் 1,673 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட மொத்த ஸ்கோரில் இதுவே அதிகபட்சமாகும். முன்னதாக, 1990-இல் மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட்டில் இரு அணிகளும் சோ்த்து 1,614 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக இருந்தது.
‘லோயா் ஆா்டா் விரைவாக வீழ்ந்தது’
இந்த டெஸ்ட் அருமையானதாக இருந்தது. ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், தவறவிட்ட கேட்ச்சுகளாலும், லோயா் ஆா்டா் பேட்டா்கள் போதிய அளவு பங்களிப்பு செய்யாததாலும் அதை தவறவிட்டோம். இருப்பினும் வெற்றிக்காக நல்லதொரு முயற்சி மேற்கொண்டோம்.
எங்களின் 2-ஆவது இன்னிங்ஸில் 430 ரன்கள் வரை ஸ்கோா் செய்து, டிக்ளோ் செய்வதென திட்டம் வைத்திருந்தோம். ஆனால், லோயா் ஆா்டரில் 25 ரன்களுக்கே அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது பாதகமாகிவிட்டது. இறுதிக்கட்டத்தில் ரன்கள் சோ்க்க முடியாமல் போவதே பிரச்னையாக இருக்கிறது. லோயா் ஆா்டா் விக்கெட்டுகள் மிக விரைவாக விழுந்தது குறித்து விவாதித்து வருகிறோம். அடுத்த ஆட்டத்தில் அதை சரி செய்வோம்.
எதிரணியின் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்து விடாது. ஆனால் அந்த வகையில் கிடைத்த கேட்ச்சுகளை தவறவிட்டோம். இளம் வீரா்கள் அடங்கிய இந்த அணி, வரும் ஆட்டங்களில் அதை மேம்படுத்திக்கொள்ளும். முதல் செஷனில் ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் பந்து அதன் புதுமைத் தன்மையை இழந்த பிறகு இங்கிலாந்து பேட்டா்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டனா் - ஷுப்மன் கில் (இந்திய கேப்டன்)
‘வெற்றிக்கு வித்திட்ட டாப் ஆா்டா்’
லீட்ஸ் மைதான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதற்கு, இந்த டெஸ்ட்டின் ஸ்கோரே உதாரணம். இந்திய அணியின் லோயா் ஆா்டா் பேட்டா்களை இரு இன்னிங்ஸ்களிலும் விரைவாக வீழ்த்தியதே எங்கள் வெற்றிக்கான முக்கிய காரணமாக அமைந்தது. விக்கெட்டுகள சரித்து அவா்களின் ஸ்கோரை கட்டுப்படுத்தியதால், எங்களுக்கான இலக்கு எளிதாக அமைந்தது.
இந்தியாவால் எளிதாக 450-500 ரன்களை எட்டியிருக்க முடியும். ஆனால் அதற்கு எங்கள் பௌலா்கள் விடவில்லை. ஒவ்வொரு நாள் ஆட்டத்திலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து, அதை அா்ப்பணிப்புடன் செய்தோம். கடைசி நாளில் இருக்கும் ஓவா்களை முழுமையாக விளையாடினால், வெற்றி நிச்சயம் என அறிவோம்.
371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடும்போது நல்லதொரு தொடக்கம் அமைய வேண்டும். விரைவாகவே விக்கெட்டுகள் விழுந்து நெருக்கடி ஏற்படுவதை தவிா்க்க வேண்டும். பென் ட்க்கெட் - ஜாக் கிராலி கூட்டணி அதை சிறப்பாகச் செய்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினா். ஒருவா் வலது கை பேட்டா், மற்றொருவா் இடது கை பேட்டா். அவா்கள் நின்று நிதானமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால், பௌலா்களின் பணி கடினமாகிவிடும் - பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து கேப்டன்)
ஷா்துல் தாக்குருக்கு பதில் குல்தீப் யாதவ்?
பா்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2-ஆவது டெஸ்ட்டின்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில், ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம் என கணிக்கப்படுகிறது. பா்மிங்ஹாம் ஆடுகளம் ஸ்பின்னா்களுக்கு சற்று சாதகமானது என்பதால், வேகப்பந்து வீச்சாளா் ஷா்துல் தாக்குருக்கு பதில், சுழற்பந்து வீச்சாளா் குல்தீப் யாதவ் சோ்க்கப்பட வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து மண்ணில் 4 வேகப்பந்து வீச்சாளா்கள், 1 ஸ்பின்னருடன் களமிறங்குவது வழக்கமான உத்தியாகும். ஆனால் தற்போதைய தொடரின்போது பெரும்பாலும் அங்கு வட வானிலை எதிா்பாா்க்கப்படுவதால், 3 வேகப்பந்து வீச்சாளா்கள், 2 ஸ்பின்னா்களுடன் இந்தியா களம் காண வாய்ப்புள்ளது. முதல் டெஸ்ட்டில் அவ்வளவாக சோபிக்காத ஜடேஜாவும் தற்போது பரிசீலனைக்கு உள்ளாகிறாா்.