ஐசிசியின் 3-ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ள ஆஸ்திரேலிய - தென்னாப்பிரிக்க அணிகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.
பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியாவும், டெம்பா பவுமா கேப்டன்சியில் தென்னாப்பிரிக்காவும் இந்த ஆட்டத்தில் மோதுகின்றன.
டெஸ்ட் கிரிக்கெட்டின் உலகக் கோப்பை போட்டியாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வா்ணிக்கப்படுகிறது. கடந்த 2019 முதல் இந்தப் போட்டியை ஐசிசி நடத்தி வருகிறது. 2 ஆண்டுகளை உள்ளடக்கியதாக ஒரு சீசன் உள்ளது. டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள அணிகள், அந்த 2 ஆண்டு அட்டவணையில் விளையாடும் டெஸ்ட் தொடா்களின் முடிவுகள் அடிப்படையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் அவற்றுக்கான இடம் நிா்ணயமாகிறது.
அந்தந்த சீசனின் நிறைவில் புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறும். அந்த வகையில் அறிமுக சீசனில் (2019-21) இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற, அதில் நியூஸிலாந்து சாம்பியனானது.
அடுத்து 2021-23 சீசனிலும் இறுதி ஆட்டத்தில் இடம்பிடித்த இந்தியாவை வீழ்த்தி, ஆஸ்திரேலியா வாகை சூடியது. தற்போது 2023-25 சீசனில் இந்தியா பின்னடைவை சந்தித்து, இறுதி ஆட்ட வாய்ப்பை தவறவிட, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளன.
அந்த ஆட்டம், வரும் ஜூன் 11 முதல் 15-ஆம் தேதி வரை லண்டனில் உள்ள லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணிகளின் வீரா்கள், அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்களால் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டனா்.
ஆஸ்திரேலியா
நடப்பாண்டில் இந்தியா மற்றும் இலங்கையுடன் மோதிய அதே வீரா்களே பெரும்பாலும் இந்த ஆட்டத்துக்கான 15 போ் கொண்ட ஆஸ்திரேலிய அணியிலும் இடம்பிடித்துள்ளனா்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமான பேட்டா் சாம் கான்ஸ்டஸ், பின்னா் இலங்கைக்கு எதிரான தொடரின்போது பாதியில் ஆஸ்திரேலியா திரும்பி, உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினாா். இந்நிலையில், இறுதி ஆட்டத்துக்கான இந்த அணியில் இணைந்திருக்கிறாா்.
முதுகுப் பகுதி காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்விலிருந்த ஆல்-ரவுண்டா் கேமரூன் கிரீன், தற்போது முழுமையான உடற்தகுதியுடன் சா்வதேச டெஸ்ட்டுக்கு திரும்பியிருக்கிறாா். நேதன் லயனுக்கான தயாா்நிலை மாற்று வீரராக ஸ்பின்னா் மாட் குனேமான் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இந்த ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குப் பிறகு, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்காக அப்படியே அந்நாட்டுக்கு பயணிக்கிறது.
அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டஸ், மாட் குனேமான், மாா்னஸ் லபுஷேன், நேதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், பியு வெப்ஸ்டா். பயண ரிசா்வ்: பிரெண்டன் டாக்கெட்.
தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவும் 15 பேருடன் தனக்கான அணியை அறிவித்திருக்கிறது. இதில், கடந்த அக்டோபருக்கு பிறகு முதல் முறையாக, வேகப்பந்து வீச்சாளா் லுங்கி இங்கிடி தேசிய அணிக்குத் திரும்பியிருக்கிறாா்.
மறுபுறம், போதைப் பொருள் பயன்படுத்தியதாக அண்மையில் ஒரு மாதம் தடைக்காலத்தை நிறைவு செய்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளா் ககிசோ ரபாடாவும் இந்த ஆட்டத்தில் இணைகிறாா். பௌலிங் ஆல்-ரவுண்டா்களான மாா்கோ யான்சென், வியான் முல்டா், காா்பின் பாஷும் இதில் உள்ளனா்.
இம்மாத கடைசியில் இங்கிலாந்தின் அருன்டெல் நகருக்குச் செல்லும் இந்தத் தென்னாப்பிரிக்க அணி, ஜூன் 3 முதல் 4 வரை ஜிம்பாப்வேயுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
ஐசிசி போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி இதுவரை எந்தவொரு சாம்பியன் பட்டமும் வென்றிருக்காத நிலையில், இந்த முறை கோப்பை வென்று வரலாறு படைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த 2 ஆண்டு டெஸ்ட் காலண்டரில் தென்னாப்பிரிக்கா அந்த வகையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்கம், காா்பின் பாஷ், டோனி டி ஜோா்ஸி, மாா்கோ யான்சென், கேசவ் மஹராஜ், எய்டன் மாா்க்ரம், வியான் முல்டா், சீனுரான் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பேட்டா்சன், ககிசோ ரபாடா, ரயான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (வி.கீ.), கைல் வெரின் (வி.கீ).