அதிக அளவிலான பார்வைகளைக் கடந்து ஐசிசி மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. நவி மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
உலகக் கோப்பைத் தொடரின் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளராக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் செயல்பட்டது. போட்டிகள் அனைத்தும் பிரத்யேகமாக ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இந்த நிலையில், இந்தியாவில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அதிக அளவிலான பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் 18.5 கோடி பேர் நேரலையில் கண்டு களித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியையும் 18.5 கோடி பேர் ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் நேரலையில் கண்டு களித்துள்ளனர். இதன் மூலம், ஆடவர் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இணையான பார்வைகளை மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியும் பெற்றுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றுமொரு சிறப்பான சாதனையையும் படைத்துள்ளது. இந்த தொடர் முழுவதையும் சேர்த்து ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் 44.6 கோடி பார்வைகள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று உலகக் கோப்பைத் தொடரின் பார்வைகளையும் ஒன்றாக சேர்த்து கிடைக்கும் பார்வைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகமாகும். இதன் மூலம், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது தரவுகள் மூலம் தெளிவாகிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான வரவேற்பும் வெகுவாக அதிகரித்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிப்போட்டி, சராசரியாக ஒரு நாளில் ஐபிஎல் தொடருக்கு கிடைக்கும் பார்வைகளைக் காட்டிலும் அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.