முகப்பு
கிரிக்கெட்

கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி; தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 22 நவம்பர் 2025, 12:48 pm IST
- படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று (நவம்பர் 22) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 36.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் ராஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜான் கேம்பெல் 26 ரன்களும், கேரி பியர் 22 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேக்கோப் டஃபி மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் மற்றும் ஸகாரி ஃபோல்க்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.

அந்த அணியில் அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 63 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மைக்கேல் பிரேஸ்வெல் 40 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 14 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் மேத்யூ ஃபோர்டி மற்றும் ஜேடன் சீல்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷமர் ஸ்பிரிங்கர் மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

மாட் ஹென்றி ஆட்ட நாயகனாகவும், கைல் ஜேமிசன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

summary

New Zealand won the third ODI against the West Indies by 4 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.