கடைசி டி20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜமைக்காவில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 169 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமில் மிஷாரா 28 ரன்கள், பதும் நிசங்கா 26 ரன்கள், வனிந்து ஹசரங்கா 21 ரன்கள் மற்றும் கமிந்து மெண்டிஸ் 20 ரன்கள் எடுத்தனர்.
Advertisement
Advertisement
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமர் ஜோசப் 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அகீல் ஹொசைன், மேத்யூ ஃபோர்ட், ஜேசன் ஹோல்டர் மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு அரைசதம்; தொடரை வென்ற மே.இ.தீவுகள்!
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு அதிகபட்சமாக 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரோவ்மன் பௌவல் 33 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மேயர் 32 ரன்களும் எடுத்தனர். ஜேசன் ஹோல்டர் அதிரடியாக 5 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். துனித் வெல்லாலகே, துஷ்மந்தா சமீரா மற்றும் மஹீஷ் தீக்ஷனா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றியது.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமர் ஜோசப் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
The West Indies team won the third T20 match against Sri Lanka by 5 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.