முடிவுக்கு வந்த 14 வருட ஐபிஎல் பயணம்; பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடவுள்ள டு பிளெஸ்ஸிஸ்!
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யப்போவதில்லை என ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யப்போவதில்லை என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமானார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான டு பிளெஸ்ஸிஸ் அறிமுகமான முதல் சீசனிலேயே 398 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக அங்கம் வகித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யப்போவதில்லை என ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 14 சீசன்களுக்குப் பிறகு, அடுத்த சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் என்னுடைய பெயரை பதிவு செய்யப் போவதில்லை என முடிவெடுத்துள்ளேன். இது மிகவும் பெரிய முடிவு. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் ஐபிஎல் தொடர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. உலகத் தரத்திலான வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு எனக்கு ஐபிஎல் தொடரில் கிடைத்ததை மிகப் பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
என்னுடைய இதயத்தில் இந்தியாவுக்கென எப்போதும் சிறப்பான இடம் இருக்கும். ஐபிஎல் தொடரில் இனி விளையாடவே மாட்டேன் எனக் கூறமாட்டேன். கண்டிப்பாக விரைவில் மீண்டும் சந்திப்போம்.
இந்த ஆண்டு நான் புதிய சவாலை தேர்ந்தெடுத்துள்ளேன். எதிர்வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடவுள்ளேன். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் புதிய அடியை எடுத்து வைக்கவுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸை தவிர்த்து, டு பிளெஸ்ஸிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டு இடைவெளியில் விளையாடியுள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். கடந்த சீசன் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 202 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதுவரை 154 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டு பிளெஸ்ஸி, 4773 ரன்கள் எடுத்துள்ளார்.
41 வயதாகும் டு பிளெஸ்ஸிஸ் இதற்கு முன்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகளுக்காக இரண்டு சீசன்களில் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.