மதுரையில் கிரிக்கெட் திடல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சர்வதேசப் போட்டியாக இருந்தாலும் சரி, சாதாரண டிஎன்பிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி நேரலையில் பார்த்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கிரிக்கெட் திடலில் நேரடியாகப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சர்வதேச போட்டிகள், ஐபிஎல், ரஞ்சி டிராபி போட்டிகள் தலைநகர் சென்னையில் மட்டும் நடத்தப்படும் நிலையில், டிஎன்பிஎல் போட்டிகள் திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, கோவை போன்ற நகரங்களிலும் நடத்தப்படுகின்றன. இதனால், மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை நேரடியாகப் பார்க்க திண்டுக்கலுக்கோ அல்லது சென்னைக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், மதுரையில் சர்வதேச போட்டிகள், ரஞ்சி டிராபி போட்டிகள், ஐபிஎல் போன்றவைகள் நடத்தப்படும் வகையில் மதுரை சிந்தாமணியில் வேலம்மாள் குழுமம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் திடல் கட்டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சிந்தாமணி அருகே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் சுமார் ரூ.325 கோடி செலவில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய சர்வதேச கிரிக்கெட் திடலான வேலம்மாள் கிரிக்கெட் திடலைத் திறந்து வைக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்.எஸ். தோனி மதுரைக்கு வருகைத் தந்துள்ளார்.
இன்று மதியம் மதுரை விமான நிலையத்துக்கு வந்த தோனியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்து தல... தல... என கோஷமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
தோனி திறந்துவக்கவுள்ள கிரிக்கெட் திடலில் உடற்பயிற்சிக் கூடம், பயிற்சி அரங்கம், கார் பார்க்கிங் வசதி, மழைபெய்தால் தண்ணீர் உறிஞ்சும் கருவி, உயர்கோபுர மின்விளக்குகள், அவரச ஊர்தி வசதி, மருத்துவ வசதி, யோகா மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் திடல் நிபுணர்களின் ஆலோசனையில்படி உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கேலரியில் மொத்தமாக 20,000 பேர் வரை ஒரே நேரத்தில் போட்டியினை ரசிக்க முடியும். முதல்கட்டமாக 7,300 பேர் உட்கார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக்காக இந்தக் கிரிக்கெட் திடலைச் சுற்றிலும் 197 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.