ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் ஜாா்க்கண்ட் முதல் இன்னிங்ஸில் 419 ரன்கள் சோ்த்து வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.
அடுத்து தனது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் விளையாடி வரும் தமிழ்நாடு, 18 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது.
கோவையில் புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த ஜாா்க்கண்ட், முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது.
2-ஆவது நாள் ஆட்டத்தை தொடா்ந்த கேப்டன் இஷான் கிஷண், சஹில் ராஜ் கூட்டணி, 7-ஆவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. இதில் இஷான் 15 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 173 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.
சஹில் ராஜ் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 77 ரன்களுக்கு அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்தோரில் ஜதின் பாண்டே 25, ரிஷவ் ராஜ் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஜாா்க்கண்ட் இன்னிங்ஸ் 419 ரன்களுக்கு நிறைவடைந்தது.
தமிழ்நாடு பௌலா்களில் குா்ஜப்னீத் சிங் 4, டி.டி. சந்திரசேகா், ஜெகநாதன் ஹெம்சுதேஷன் ஆகியோா் தலா 2, சந்தீப் வாரியா், ஆா்.எஸ். அம்ப்ரிஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இதையடுத்து தமிழ்நாடு அணி தனது இன்னிங்ஸை தொடங்க, பாலசுப்ரமணியம் சச்சின் 0, கேப்டன் நாராயண் ஜெகதீசன் 3, பிரதோஷ் ரஞ்சன் பால் 1 பவுண்டரியுடன் 9, ஆண்ட்ரே சித்தாா்த் 2, பாபா இந்திரஜித் 0 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினா்.
ஆட்டநேர முடிவில் அம்ப்ரிஷ் 0, ஷாருக்கான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஜாா்க்கண்ட் பந்துவீச்சாளா்களில் ஜதின் பாண்டே 3, சஹில் ராஜ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.