உலகக் கோப்பையை வெல்வதில் இந்திய அணி உறுதியாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. குவாஹாட்டியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.
உலகக் கோப்பைத் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுவதால், இந்த இரண்டு அணிகளின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இளம் மற்றும் மூத்த வீராங்கனைகள் என இந்திய அணி சமபலத்துடன் இருப்பதாகவும், உலகக் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருப்பதாகவும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளையும் பூர்த்தி செய்யும் விதமான சமபலத்துடன் கூடிய இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குகிறது. அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், பிரதீகா ராவல், ரிச்சா கோஷ் மற்றும் உமா சேத்ரி போன்ற திறமைவாய்ந்த பேட்டர்கள் இருக்கிறார்கள்.
இந்திய அணியில் பந்துவீச்சும் வலுவாக உள்ளது. ரேனுகா தாக்குர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கௌட், ஸ்ரீ சரணி மற்றும் ராதா யாதவ் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர். அத்துடன் அணியில் தீப்தி சர்மா, ஸ்நே ராணா மற்றும் அமன்ஜோத் கௌர் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றக் கூடியவர்கள்.
சமபலத்துடன் உள்ள இந்திய அணி மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குகிறது. இந்திய அணிக்கு கோப்பையை வென்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற போட்டி அணிகளுக்குள் எப்போதும் கடுமையாக இருக்கும். ஆனால், அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு திருப்திகரமானதாக இருந்தது. அதே உத்வேகத்துடன் உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.