கிரிக்கெட்

ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்! பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது!

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி ஆசியக் கோப்பை வென்றதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி ஆசியக் கோப்பை வென்றதைப் பற்றி...

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது.

பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். பாகிஸ்தான் அணி 84 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய ஷாகிப்ஸாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 57 ரன்கள்(5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

பும்ரா...

அதன் பின், ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயுப் ஜோடி சேர்ந்தனர். சைம் ஆயுப் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபகர் ஸமான் 35 பந்துகளில் 46 ரன்கள்(பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

பாகிஸ்தான் அணி கடைசி 62 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இந்திய அணித் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ரிங்கு - திலக்..

பின்னர், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணிக்கு தொடக்கமே சுமாராக அமைந்தது.

கடந்த ஆட்டங்களைப் போலவே அதிரடியைத் தொடருவார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 5 ரன்களிலும், துணை கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். இதனால், இந்திய அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவிப்புக்குள்ளானது.

ஆர்ப்பரிப்பில்...

அதன்பின்னர், கைகோர்த்த திலக் வர்மா - சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு ஓடவிட்டனர். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி - ஒரு சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து அஃப்ராரிடம் வீழ்ந்தார்.

இறுதிக்கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் தேவையாக இருந்தது. 19-வது ஓவரில் ஒரு விக்கெட் உள்பட 7 ரன்கள் கிடைத்தது. அதிரடியாக விளையாடிய துபே 22 பந்துகளில் 2 சிக்ஸர் - 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

கில் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில்...

இதனால், இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான கடைசி ஓவரை ஹாரிஸ் ரௌஃப் வீசினார். அவரை அடித்து துவைத்து அதிரடியைக் காட்டிய திலக் வர்மா சிக்ஸர் விளாசி பதற்றத்தைத் தணித்தார். இறுதியில் ரிங்கு சிங் பவுண்டரி விளாசி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். திலக் வர்மா 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

முடிவில், இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கோப்பைத் தொடரில் 9-வது முறையாக கோப்பையை வென்று, கோப்பையைத் தக்கவைத்துள்ளது.

மேலும், இந்தத் தொடரில் லீக், சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டி என பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணியே வெற்றி வாகையை சூடியுள்ளது.

India is the champion of the Asia Cup! They beat Pakistan in a thrilling match!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - மெத்வதெவ்!

நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

கா‌ந்திய மஹா விரத‌ங்க‌ள்!

இந்திய ராணுவத்துக்கு நிகரானதா பாக். ராணுவம்?

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

SCROLL FOR NEXT