முகப்பு
கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படுமா?

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியின் டார் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படுவார்களா என்பது குறித்து...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:58 PM
தில்லி கேபிடல்ஸின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் - படம் | தில்லி கேபிடல்ஸ் (எக்ஸ்)
பகிர்:

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியின் டார் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி அதன் முதல் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னௌவுக்கு எதிரான போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்ற போதிலும், அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பியது அந்த அணிக்கு சற்று கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. கடந்த சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமையாமல், கிட்டத்தட்ட 7 தொடக்க ஆட்டக்காரர்கள் காம்பினேஷன் முயற்சிக்கப்பட்டது. லக்னௌவுக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் சொதப்பியதால், கடந்த சீசனில் சந்தித்த அதே பிரச்னை அணியில் தொடர்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

லக்னௌவுக்கு எதிரான போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் பதும் நிசங்கா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே கே.எல்.ராகுல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், பதும் நிசங்கா 1 ரன், நிதீஷ் ராணா 15 ரன்கள், அக்‌ஷர் படேல் 0 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தில்லி அணியை, இம்பாக்ட் வீரர் சமீர் ரிஸ்வி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

முதல் போட்டியில் டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில், தில்லியில் நாளை (ஏப்ரல் 4) நடைபெறும் இரண்டாவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை அணி பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, டிரண்ட் போல்ட், ஷர்துல் தாக்குர், ஹார்திக் பாண்டியா போன்ற வீரர்களுடன் வலுவாக உள்ளது. முதல் கோப்பைக்கான தேடலில் உள்ள தில்லி கேபிடல்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேட்டிங்கில் டாப் ஆர்டர் சொதப்பினாலும், தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சில் வலுவாக உள்ளது. அந்த அணியில் லுங்கி இங்கிடி, நடராஜன், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் வலிமை சேர்க்கின்றனர். அணியில் மிட்செல் ஸ்டார்க் இணைந்துவிட்டால், பந்துவீச்சு மேலும் வலுவாக மாறிவிடும்.

14 ஆண்டுகளில் முதல் முறையாக முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் பேட்டிங்கில் அசத்திய ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டான் தில்லிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியைத் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே மும்பை அணியிடம் உள்ளதால், அந்த அணி பேட்டிங்கிலும் வலுவாக உள்ளது.

முதல் போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்லி கேபிடல்ஸ் அணியின் டாப் ஆர்டர் மும்பைக்கு எதிராக சிறப்பாக செயல்படுமா? அல்லது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கைகள் ஓங்குமா? என்பதை நாளை போட்டியில் பார்க்கலாம்.

summary

Regarding whether the Delhi Capitals' top-order batters will perform well in the match against the Mumbai Indians...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.