முகப்பு
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இலங்கையையும் வீழ்த்தி ஜிம்பாப்வே அபாரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 1:31 PM
பந்தை சிக்ஸருக்கு விளாசும் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்பில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

பதும் நிசங்கா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 179 ரன்கள் இலக்கு!

Advertisement

டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பவன் ரத்நாயகே 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். குசல் பெரேரா 22 ரன்களும், துனித் வெல்லாலகே 15 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முசராபானி, பிராட் ஈவன்ஸ் மற்று கிரீம் கிரெமர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரியான் பர்ல் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

பிரையன் பென்னட், சிக்கந்தர் ராஸா அசத்தல்!

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் மற்றும் மருமானி களமிறங்கினர். இந்த இணை அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. மருமானி 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின், ரியான் பர்ல் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

அதன் பின், பிரையன் பென்னட் மற்றும் கேப்டன் சிக்கந்தர் ராஸா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. நிதானமாக விளையாடிய பிரையன் பென்னட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அதிரடியாக விளையாடிய கேப்டன் சிக்கந்தர் ராஸா 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். டோனி முனியோங்கா இறுதிக்கட்டத்தில் 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

இலங்கை தரப்பில் துஷான் ஹேமந்தா இரண்டு விக்கெட்டுகளையும், கேப்டன் தாசுன் ஷானகா மற்றும் துனித் வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சிக்கந்தர் ராஸாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இலங்கைக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், குரூப் ஸ்டேஜ் போட்டிகள் அனைத்திலும் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. அயர்லாந்துக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

குரூப் பி பிரிவில் 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஜிம்பாப்வே அணி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Zimbabwe won the T20 World Cup match against Sri Lanka by 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments