இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி மறுத்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, குறுகிய வடிவிலான போட்டிகளில் (டி20 மற்றும் ஒருநாள்) இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டங்களை இந்திய அணி வென்று அசத்தியது.
குறுகிய வடிவிலான போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வரலாற்றுத் தோல்விகளை சந்தித்தது. நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை இந்திய அணி முழுமையாக இழந்தது. இதனால், இந்திய அணி வீரர்களின் மீதும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் மீதும் விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்த நிலையில், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தன்னை பின் தொடர்பவர்களுடன் கலந்துரையாடிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட மறுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கலந்துரையாடலின்போது, கில்லெஸ்பியிடம் பயனர் ஒருவர் கூறியதாவது: இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அவர்களது சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவி வருகிறார்கள். சொந்த மண்ணில் தோல்வியடைவது மட்டுமின்றி இரண்டு முறை டெஸ்ட் தொடரை முழுமையாக அவர்கள் இழந்துள்ளனர். அதன் காரணமாக, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சியாளராக நீங்கள் செயல்பட வேண்டும். இந்திய அணிக்கு உங்களது பயிற்சி மிக முக்கியமாக தேவைப்படுகிறது என்றார்.
இதற்கு ஜேசன் கில்லெஸ்பி, வேண்டாம் நன்றி என பதிலளித்து இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சியாளராக செயல்பட விருப்பமில்லாததை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் நிறைவடைந்துள்ளன.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ஜேசன் கில்லெஸ்பி, இதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.