ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வீரர்களான ரிஷப் பந்த் மற்றும் முகமது சிராஜின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜனவரி 11 ஆம் தேதி வதோதராவில் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நாளை (ஜனவரி 3) அறிவிக்கவுள்ளது. ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் முகமது சிராஜ் இருவரும் இடம்பெறுவார்களா என்பது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் ரிஷப் பந்த் மற்றும் முகமது சிராஜ் இருவரும் இடம்பெறவில்லை.
அண்மையில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் இஷான் கிஷன் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தனர். இஷான் கிஷன் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். மேலும், டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடும் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அணிக்கான விக்கெட் கீப்பர் தெரிவுகளாக இருக்கின்றனர். அதனால், ரிஷப் பந்த்தின் இடம் அணியில் கேள்விக்குறியாகியுள்ளது.
ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை, ரிஷப் பந்த் 5-வது அல்லது 6-வது வீரராக களமிறங்கி நடுவரிசையில் விளையாடக் கூடியவர். அதனால், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பருக்கான தெரிவாக அவர் இருப்பாரா என்பது தெரியவில்லை. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, ஜூலை 2024 மற்றும் டிசம்பர் 2025 இடைவெளியில் ரிஷப் பந்த் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக குவாஹாட்டி டெஸ்ட்டில் ரிஷப் பந்த் தேர்ந்தெடுத்து விளையாடிய ஷாட்டுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், அணித் தேர்வுக்குழுவுக்கும் திருப்தியளிப்பதாக இல்லை. ஆனால், போதிய வாய்ப்புகள் வழங்கப்படமால், ரிஷப் பந்த் அணியிலிருந்து நீக்கப்பட்டால், தலைமைப் பயிற்சியாளர் மற்றும் அணித் தேர்வுக்குழு சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்.
ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானது முதல் கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை ரிஷப் பந்த் வெறும் 31 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 33.5 என்ற சராசரியுடன் ரிஷப் பந்த் 871 ரன்கள் குவித்துள்ளார்.
முகமது சிராஜின் நிலை என்ன?
டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வீரர்களுக்கு ஓய்வு அளித்தது போல, அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆடுகளத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாத முகமது சிராஜ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை. விஜய் ஹசாரே தொடரின் முதல் நான்கு சுற்றுகளில் முகமது சிராஜ் விளையாடவில்லை. கடைசி மூன்று சுற்றுகளில் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் தொடர்ந்து இடம்பெறாதது குழப்பமாகவே நீடித்து வருகிறது.
அதேபோல, பெங்கால் அணிக்காக நன்றாக விளையாடியபோதும் முகமது ஷமியும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் தேர்வுக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. முகமது ஷமிக்கும், அணித் தேர்வுக்குழுவுக்கும் இடையே சரியான தகவல் பரிமாற்றம் நடந்ததாகவும் தெரியவில்லை.
விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் சர்ஃபராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இடங்கள் ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், தேவ்தத் படிக்கலுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடிக்க சர்ஃபராஸ் கான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இருவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இவர்களில் யாராவது ஒருவர் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழுத் தலைவர்கள் அறிவிக்கும்போது, மேற்கண்ட பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.