நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் திலக் வர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு அதிலிருந்து குணமடைந்து வருவதால் இந்திய வீரர் திலக் வர்மா நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார்.
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டிக்காக இந்திய அணியுடன் திலக் வர்மா இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி இரண்டு போட்டிகளிலும் திலக் வர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அறுவைச் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வரும் திலக் வர்மா முழு உடல் ததியுடன் இல்லாததால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முதல் மூன்று போட்டிகளுக்காக அணியில் சேர்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், கடைசி இரண்டு போட்டிகளிலும் விளையாட பிசிசிஐ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக பிப்ரவரி 3 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் திலக் வர்மா இந்திய அணியுடன் இணைவார் எனக் கூறப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் வருகிற ஜனவரி 28 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.