FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐபிஎல் தொடரில் கலக்க காத்திருக்கும் 10 புது முகங்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கலக்க காத்திருக்கும் 10 புதிய வீரர்கள் குறித்து...

பிரசந்த் வீர் - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
பகிர்:

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பத்து அணிகளிலிருந்தும் ஒவ்வொரு புதுமுக வீரர் கலக்க காத்திருக்கின்றனர்.

கடந்த ஐபிஎல் சீசனில் இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தங்களது பக்கம் திருப்பினர். இந்த ஆண்டும் இளம் வீரர்கள் பலரும் தங்களது திறமையை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர்.

அடுத்த இரண்டு மாதங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளிலிருந்தும் கீழ்கண்ட 10 வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் இதுவரை ஐபிஎல் தொடரில் அறிமுகமாகியிருக்க மாட்டார்கள் அல்லது ஐந்து போட்டிகளுக்கும் குறைவாக விளையாடியிருப்பார்கள்.

Advertisement

Advertisement

பிரசாந்த் வீர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

இந்தியாவில் இடதுகை சுழற்பந்துவீச்சு மற்றும் இடதுகை ஆட்டக்காரர்கள் அதிக பேர் இருக்கிறார்கள். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்பும் அளவுக்கு யாரும் இருப்பதாக சென்னை அணி நிர்வாகம் கருதவில்லை. அதன் காரணமாக அவரது இடத்தை நிரப்ப 20 வயதாகும் இளம் வீரர் பிரசாந்த் வீரை சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் பிரசாந்த் வீரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 14.20 கோடிக்கு எடுத்தது. சிஎஸ்கே அணி நிர்வாகம் இதற்கு முன்பாக இளம் வீரர் ஒருவரை ஏலத்தில் எடுக்க இந்த அளவுக்கு மிகப் பெரிய தொகையை செலவிட்டதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸின் வீரர் தேடுதல் குழுவின் கவனத்தை ஈர்த்த பிரசாந்த் வீர் மிகப் பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

சையது முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரசாந்த் வீர் வெறும் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவரது பந்துவீச்சு எகானமி 6.45 ஆகவும், பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 167-க்கும் அதிகமாகவும் உள்ளது. எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்யுப் நபி (தில்லி கேபிடல்ஸ்)

உள்ளூர் போட்டிகளில் ஜம்மு - காஷ்மீர் அணிக்காக விளையாடி வரும் ஆக்யுப் நபி தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இது அவரது அறிமுக ஐபிஎல் தொடராகும். 29 வயதாகும் ஆக்யுப் நபி, 8 ஆண்டுகள் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

ரஞ்சி கோப்பை தொடர் ஆக்யுப் நபிக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அவர் ரஞ்சி சீசனில் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சையது முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜம்மு - காஷ்மீர் அணிக்காக அவர் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசக் கூடிய அவரது பந்துவீச்சு எகானமி 7.74 ஆக உள்ளது.

ஆக்யுப் நபியை ஏலத்தில் எடுத்துள்ள தில்லி கேபிடல்ஸ் அணிக்கு கவலையளிக்கும் விஷயம் ஒன்று இருக்குமென்றால், அது ஆக்யுப் நபியின் சராசரி பந்துவீச்சு வேகம் மட்டுமே. அவர் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்திலும், அதற்கும் குறைவாகவும் பந்துவீசுகிறார். இந்த பந்துவீச்சு வேகம் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனுபவம் வாய்ந்த வீரர்களின் பேட்டிங்கை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தும் எனத் தெரியவில்லை.

அசோக் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்)

இந்தியாவில் உள்ள இளம் வேகப் பந்துவீச்சாளர்களில் அசோக் சர்மாவும் ஒருவர். அவர் ஐபிஎல் போட்டிகளில் இதற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகித்துள்ளார். ஆனால், இதுவரை அவர் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடியதில்லை.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ககிசோ ரபாடா போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கையில், 23 வயதாகும் இளம் வீரர் அசோக் சர்மாவுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், அசோக் சர்மாவை போட்டிகளில் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தேஜஸ்வி தாஹியா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், விக்கெட் கீப்பர் பேட்டராக அங்க்ரிஷ் ரகுவன்ஷியை உருவாக்கி கடந்த இரண்டு சீசன்களாக அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், தில்லியைச் சேர்ந்த 23 வயதாகும் இளம் வீரர் தாஹியா, மிகவும் திறமை வாய்ந்தவர்.

அங்க்ரிஷ் ரகுவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்தது போன்று இளம் வீரர் தேஜஸ்வி தாஹியாவுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவரால் நீண்ட காலத்துக்கு சிறப்பாக விளையாட முடியும். சையது முஸ்டாக் தொடரில் 168-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் அரைசதம் விளாசிய தேஜஸ்வி தாஹியா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மிடில் ஆர்டரில் அவர் கொல்கத்தா அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார்.

நமன் திவாரி (லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்)

இந்தியாவில் சிறந்த இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். 20 வயதாகும் இடதுகை வேகப் பந்துவீச்சாளரான நமன் திவாரி கடந்த 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

வலதுகை பேட்டர்களுக்கு தனது வேகப் பந்துவீச்சால் நமன் திவாரி அதிர்ச்சியளிக்க காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அல்லா காஸன்ஃபார் (மும்பை இந்தியன்ஸ்)

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இந்த வீரரது பந்துவீச்சை காண ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள் என்றால், அது அல்லா காஸன்ஃபாரின் பந்துவீச்சு என்றே கூறலாம். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயதாகும் இளம் வீரரான இவர், புதிய மிஸ்டிரி பந்துவீச்சாளர் பட்டியலில் இணைந்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் அல்லா காஸன்ஃபார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுவதாக இருந்தது. ஆனால், அவர் அந்த தொடரில் விளையாடவில்லை. மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாடியுள்ள அல்லா காஸன்ஃபார் ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் வெலனில் 4 வெளிநாட்டு வீரர்களில் காஸன்ஃபார் கண்டிப்பாக இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

மிட்செல் ஓவன் (பஞ்சாப் கிங்ஸ்)

பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக மிட்செல் ஓவன் 36 போட்டிகளில் 187-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் அவருக்கு இருக்கிறது.

24 வயதாகும் மிட்செல் ஓவனின் அதிரடியான பேட்டிங் மட்டுமின்றி, மிதவேக பந்துவீச்சும் அணிக்கு உதவியாக இருக்கும்.

ரவி சிங் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

24 வயதாகும் ரவி சிங் கடந்த ஆண்டு சையது முஸ்டாக் அலி தொடரில் அதிரடியாக விளையாடி 218 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 173-க்கும் அதிகமாக வைத்துள்ளார்.

விதர்பா அணிக்கு எதிராக சேஸிங்கின்போது, ரவி சிங் அதிரடியாக 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அவர் ரூ.95 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஜேக்கப் பெத்தேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

22 வயதாகும் இளம் இங்கிலாந்து வீரரான ஜேக்கப் பெத்தேலுக்கு கடந்த ஐபிஎல் சீசனில் அதிகம் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனால், இந்த முறை ஆர்சிபி அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஜேக்கப் பெத்தேல் அபாரமாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். அதே உத்வேகத்துடன் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவுள்ளார்.

ஷிவாங் குமார் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

23 வயதாகும் ஷிவாங் குமார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆவார். அவரது சிறப்பான பந்துவீச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இடதுகை சுழற்பந்துவீச்சாளராக மட்டுமல்லாது, பின்வரிசையில் தேவைப்படும் தருணங்களில் ஒரு பேட்டராகவும் அவரால் செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Here are 10 new players who are waiting to shake up this year's IPL...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments