சென்னைக்கு 5-ஆவது வெற்றி! சாம்சன் அதிரடி!
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் சாய்த்தது.
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
முதலில் டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுக்க, சென்னை 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஆல்-ரவுண்டாக அசத்திய சென்னை அணியில், பெளலிங்கில் நூர் அகமதும், பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும் மிளிர்ந்தனர்.
முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய பதும் நிசங்கா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19, கே.எல்.ராகுல் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
Advertisement
அடுத்து கருண் நாயர் 2 பவுண்டரிகளுடன் 13, நிதீஷ் ராணா 2 பவுண்டரிகள் உள்பட 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 5-ஆவது பேட்டராக வந்த கேப்டன் அக்ஸர் படேல் 2 ரன்களுக்கு சாய்க்கப்பட்டார்.
இந்நிலையில், 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - சமீர் ரிஸ்வி, விக்கெட் சரிவைத் தடுத்து 65 ரன்கள் சேர்த்தனர். ஸ்டப்ஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 38, ஆசுதோஷ் சர்மா 2 சிக்ஸர்களுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஓவர்கள் முடிவில், சமீர் ரிஸ்வி 4 சிக்ஸர்களுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, மிட்செல் ஸ்டார்க் ரன்னின்றி துணை நின்றார்.
சென்னை பெளலர்களில் நூர் அகமது 2, அகீல் ஹுசைன், முகேஷ் செளதரி, குர்ஜப்னீத் சிங், ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 156 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சென்னை அணியில், சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தார்.
தொடர்ந்து வந்த உர்வில் படேல் 2 சிக்ஸர்களுடன் 17 ரன்களுக்கு விடைபெற்றார். 4-ஆவது பேட்டராக வந்த கார்த்திக் சர்மா, சாம்சனுடன் இணைந்தார்.
இவர்கள் ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல், அணியை வெற்றிக்கு வழிநடத்தியது. சாம்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 87, கார்த்திக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் சேர்த்தனர். டெல்லி தரப்பில் அக்ஸர் படேல், லுங்கி இங்கிடி ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.