பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆர்சிபி முதலில் பேட் செய்தது.
வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி அரைசதம்!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி 37 பந்துகளில் 58 ரன்களும் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), தேவ்தத் படிக்கல் 25 பந்துகளில் 45 ரன்களும் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர். டிம் டேவிட் 12 பந்துகளில் அதிரடியாக 28 ரன்கள் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்பிரித் பிரார் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி தகுதி!
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ், 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கூப்பர் கானலி மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா 37 ரன்கள், சூர்யான்ஷ் ஷெட்ஜ் 35 ரன்கள் எடுத்தனர்.
ஆர்சிபி தரப்பில் ராஷிக் சலாம் தர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜோஷ் ஹேசில்வுட், சூயாஷ் சர்மா மற்றும் ரோமாரியோ ஷெப்பர்ட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி 9 வெற்றிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Royal Challengers Bangalore became the first team to advance to the playoffs in the IPL tournament by defeating Punjab Kings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.