சென்னை சேப்பாக்கம் திடலில் பிக்பாஷ் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ அனுமதி?!
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடலில் பிக்பாஷ் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதாக வெளியான தகவலைப் பற்றி...
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடலில் பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதியளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஐபிஎல், சர்வதேச போட்டிகள், மாநில பிரீமியர் லீக் தொடர்கள் என லீக் தொடர்களும் அதிகரித்திருக்கின்றன. இந்தியா மட்டுமின்றி, உலகமெங்கிலும் நடக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கின்றன.
சமீபத்தில், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடருக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா ஆகிய அணிகள் விளையாடிய போட்டிகளுக்கு, வேலை நாள்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு ஆரவாரப்படுத்தியிருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ் லீக்' வரலாற்றில் முதல்முறையாக இந்திய மண்ணில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2026-2027 ஆம் ஆண்டுக்கான சீசனின் முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் திடலில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அனுமதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் தொடரை நடத்துவதற்கு கடந்த 3 மாதங்களாக இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், பிசிசிஐ இதற்குச் சம்மதிக்கவில்லை. சமீபத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த 5 பேர் கொண்ட உயர்நிலைக் குழு, சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் திடலைப் பார்வையிட்டு ஆய்வு செய்தது. நேற்று நடந்த சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியின்போதும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுவதாகவும், இந்தியாவுடன் உறவை மேம்படுத்த இப்போட்டியை சென்னையில் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போலவே, 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடர் அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிக்பாஷ் லீக்கின் 16-வது தொடரின் தொடக்க போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்தப் போட்டி டிசம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் டிசம்பர் மாதம் பருவமழை கடுமையாக இருக்கும் என்பதால், வானிலை ஒரு பெரிய சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதையும் கருத்தில் கொண்டு இரு நாட்டு வாரியங்களும் ஆலோசித்து வருகின்றன.