முதல் ஆட்டத்தில் சொதப்பிய முன்னணி அணிகள்
ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வாகைசூட வாய்ப்பிருப்பதாக கருதப்படும் பிரேசில்,
ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வாகைசூட வாய்ப்பிருப்பதாக கருதப்படும் பிரேசில், நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, கடந்த முறை இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஆர்ஜென்டீனா, ஸ்பெயின் ஆகிய 4 அணிகளும் தங்களின் முதல் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றன.
சமீபத்திய உலகக் கோப்பை வரலாற்றை எடுத்துக் கொண்டால், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளஅணிகளாகக் கருதப்படும் 4 முன்னணி அணிகள் முதல் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழப்பது இதுவே முதல்முறையாகும். எனினும் ஆரம்பக் கட்ட ஆட்டங்களை வைத்து முன்னணி அணிகளை குறைத்து மதிப்பிட முடியாது. ஸ்பெயின், பிரேசில், ஆர்ஜென்டீனா ஆகியவை தங்களின் முதல் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், டிரா செய்துவிட்டன. ஆனால் வலுவான அணியாகக் கருதப்படும் நடப்பு சாம்பியனான ஜெர்மனியோ 0-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவிடம் தோற்றிருக்கிறது. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி முதல் ஆட்டத்தில் தோற்ற அணிகளின் வரிசையில் ஸ்பெயின் (2014), பிரான்ஸ் (2002), ஆர்ஜென்டீனா (1990, 1982), இத்தாலி (1952) ஆகியவற்றுடன் ஜெர்மனியும் இணைந்துள்ளது.
ஜெர்மனிக்கு எதிராக துல்லியமாக உத்திகளை வகுத்து களமிறங்கிய மெக்ஸிகோ, அபாரமாக ஆடி வெற்றி கண்டதன் மூலம் புதிய உத்வேகம் பெற்றிருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் வசம் அதிகநேரம் பந்து இருந்தபோதிலும், அவர்களால் மெக்ஸிகோவின் பின்கள வீரர்களைத் தாண்டி கோலடிக்க முடியாமல் போனது ஜெர்மனிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஜெர்மனிக்கு சிக்கல்:
இளமை, அனுபவம் என சமபலம் கொண்ட அணியாகத் திகழும் ஜெர்மனி முழு பலத்துடன் களமிறங்கியபோதிலும், முதல் ஆட்டத்தில் தோற்றதால், அடுத்த இரு ஆட்டங்களில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது ஜெர்மனி. அடுத்த ஆட்டங்களில் ஸ்வீடனையும், தென் கொரியாவையும் கட்டாயம் ஜெர்மனி வெல்ல வேண்டும். இல்லையெனில் நடப்பு சாம்பியனுக்கு அடுத்த சுற்று கனவாகிவிடும்.
பிரேசில், ஆர்ஜென்டீனா அணிகள் தங்களின் முதல் ஆட்டத்தில் முன்னிலை பெற்ற நிலையில், அதன்பிறகு எதிரணிகளை கோலடிக்கவிட்டதன் மூலம் வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டன. இதற்கு அந்த அணிகள் பதற்றத்துடன் விளையாடியதே காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மரை ஸ்விட்சர்லாந்து தடுப்பாட்டக்காரர்களும், மிட்பீல்டர்களும் சுற்றி வளைத்தபோது, பிரேசிலின் மற்ற ஸ்டிரைக்கர்களான காபிரியேல் ஜீசஸ், வில்லியன், குடின்கோ ஆகியோர் கோலடிக்க முயலாதது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.
ஸ்பெயின் அணி 3-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலுடன் டிரா செய்தது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களை அடித்ததால்தான், ஸ்பெயின் வெற்றியை இழக்க நேரிட்டது. எனினும் எஞ்சிய ஆட்டங்கள் அந்த அணிக்கு எளிதானதாக இருக்கும் என்பதால், அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
பயிற்சியாளரே பலம்: ஜெர்மனியை வீழ்த்திய முதல் மத்திய அமெரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது மெக்ஸிகோ. இந்த வெற்றியின் சூத்திரதாரியாக அனைவராலும் போற்றப்படுவர் அந்த அணியின் பயிற்சியாளர் ஜூவான் கார்லோஸ் ஒசாரியோதான். காரணம், அவர் தனது அணியினரை வெற்றிக்காக விளையாடுமாறு ஊக்கப்படுத்துகிறாரே தவிர, மாறாக தோல்வியைக் கூறி நெருக்கடி கொடுப்பதில்லை.
முதல் ஆட்டத்தில் சொதப்பிய முன்னணி அணிகள், அடுத்த ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.