நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான். முதலில் ஆடிய பெங்களூரு 158/4 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் 164/3 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி 59 ரன்களை விளாசினார்.
இதன்மூலம் இந்த வருட ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது ஆர்சிபி அணி. ஒரு வெற்றியும் பெறாமல் ஒரு புள்ளியும் எடுக்காமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆனால் இதுபோல ஐபிஎல் போட்டியில் ஆரம்பத்தில் தொடர்ச்சியான தோல்விகளைப் பல அணிகள் சந்தித்துள்ளன.
6 தில்லி டேர்டெவில்ஸ் (2013)
5 டெக்கான் சார்ஜர்ஸ் (2012)
5 மும்பை இந்தியன்ஸ் (2014)
4 மும்பை இந்தியன்ஸ் (2008)
4 மும்பை இந்தியன்ஸ் (2015)
4 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (2019) *
இதுபோல ஆரம்பத்திலேயே ஏற்படும் தொடர் தோல்விகளால் எந்த அணியும் துவண்டு போக வாய்ப்புண்டு. ஆனால் அப்படி நிகழும்போது தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் எப்படி விளையாடவேண்டும் என்பதை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து அனைத்து அணிகளும் கற்றுக்கொள்ளவேண்டும். ஆரம்பத்தில் எவ்வளவு தோல்விகள் ஏற்பட்டாலும் மீண்டு வர முடியும் என்பதை ஒருமுறை அல்ல, இருமுறை நிகழ்த்திக் காண்பித்துள்ளது மும்பை அணி.
2014 ஐபிஎல்
2014-ல் ஆரம்பத்தில் 5 ஆட்டங்களிலும் தோற்றுப்போன மும்பை இந்தியன்ஸ், கடைசியில் மீதமுள்ள 9 ஆட்டங்களில் 7-ல் வென்று பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றது. எனினும் எலிமினேட்டர் ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோற்று வெளியேறியது. ஓ, இப்படி கூட மீண்டுவரமுடியுமா என அனைத்து அணிகளுக்கும் பாடமாக அமைந்தது. ஆனால் அடுத்த வருடம் இன்னும் ஒரு படி மேலே சென்று சாதித்துக் காண்பித்தது மும்பை அணி.
2015 ஐபிஎல்
2015-ம் வருடமும் மும்பை அணிக்குக் கிட்டத்தட்ட அதேபோல தொடர் தோல்விகள் அமைந்தன. முதல் 4 ஆட்டங்களிலும் தோற்றது. எனினும் 2014-ல் இதைவிட அதிக ஆட்டங்களில் தோற்றாலும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றதால் நம்பிக்கையுடன் விளையாடினார்கள் மும்பை வீரர்கள். திருப்புமுனை உண்டானது. அடுத்த 10 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்கள் மும்பை வீரர்கள். இதனால் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் கிடைத்தது. அப்படியே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையையும் வென்றது மும்பை அணி. இந்த வெற்றி தற்போது எல்லா அணிகளுக்குமான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. எந்தவொரு தோல்வியாலும் நம் வெற்றியைத் தடுக்கமுடியாது. போராடினால் கோப்பை நிச்சயம் என்கிற கருத்து ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேல் ஒரு உதாரணம் தேவையில்லை. விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி இதுபோன்ற திருப்புமுனைகளை இந்த வருடம் உருவாக்குமா? மும்பையிடமிருந்து புதிய நம்பிக்கையைக் கற்றுக்கொள்ளுமா? பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.