முகப்பு
ஐபிஎல்

அசராமல் சிக்ஸர் அடிப்பது எப்படி?: ரஸ்ஸல் சொல்லும் ரகசியம்!

நான் காலையில் எழும்போது என் வாழ்க்கையில் இன்னொரு சிறந்த ஆட்டத்தை விளையாடக் கிடைத்துள்ள...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், தனது சிக்ஸர் மழையால் பெங்களூரு அணியிடமிருந்த வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்து கொல்கத்தாவுக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித்தந்தார் ஆண்ட்ரு ரஸ்ஸல்.

முதலில் ஆடிய பெங்களூரு 205/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 206/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகைத் தன் பக்கம் திருப்பியுள்ளார் ரஸ்ஸல்.

இந்த ஐபிஎல் போட்டியில் ரஸ்ஸலைத் தடுத்த ஒரே பந்துவீச்சாளர் தில்லியின் ரபாடா தான். சூப்பர் ஓவரில் அருமையான யார்க்கரால் ரஸ்ஸலை க்ளீன் போல்ட் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மற்றபடி, இந்த ஐபிஎல் போட்டியில் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் புதிராக உள்ளார் ரஸ்ஸல். சரி, இதன் ரகசியம் என்ன? அசராமல் எப்படி சிக்ஸர்கள் அடிக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு ரஸ்ஸல் அளித்துள்ள பதில்:

நான் மிகச்சிறந்த வீரன் என்பது எனக்குத் தெரியும். அதுகுறித்து பெரிதாக யோசிக்கமாட்டேன். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என எண்ணுவேன். நீங்கள் சிறப்பாக விளையாடும்போது ஏதோவொரு கட்டத்தில் தடுமாறுவீர்கள். என்னுடைய இந்தச் சிறப்பான ஆட்டம் தொடரவேண்டும் என எண்ணுகிறேன். எதையும் லேசாக எடுத்துக்கொள்வதில்லை. முந்தைய ஆட்டத்தில் 40 ரன்கள் எடுத்ததால் அடுத்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடுவேன் எனச் சொல்லமாட்டேன். இது புதிய ஆட்டம், ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாகத்தான் அணுகவேண்டும். 

ஒருகட்டத்தில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்போது அதை நிறுத்தமாட்டீர்கள். தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டே இருப்பீர்கள். நான் காலையில் எழும்போது என் வாழ்க்கையில் இன்னொரு சிறந்த ஆட்டத்தை விளையாடக் கிடைத்துள்ள வாய்ப்பாகவே கருதுவேன். 

இப்படி சிக்ஸர்கள் அடிக்கும்  நான் அதற்காக சிறப்பு உணவுகள் எதையும் உண்பதில்லை. நல்ல மனநிலையும் திட்டமிடுதலுமே என் அதிரடி ஆட்டத்துக்குக் காரணம். என் மனநிலை எப்போதும் சுதந்தரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.