முகப்பு
ஐபிஎல்

முதல் வெற்றியை அடையுமா சிஎஸ்கே?: சன்ரைசர்ஸ் அணிக்கு 155 ரன்கள் இலக்கு

நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
மொயீன் அலி
பகிர்:

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. 

நவி மும்பையில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் மார்கோ யான்சென், ஷஷாங் சிங் ஆகியோர் அறிமுகமாகியுள்ளார்கள். தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நடராஜன் இடம்பெற்றுள்ளார்கள். சிஎஸ்கே அணியில் பிரிடோரியஸுக்குப் பதிலாக இலங்கைச் சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்‌ஷனா அறிமுகமாகியுள்ளார்.  முகேஷ் செளத்ரி அணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.

சிஎஸ்கே இதுவரை மூன்று ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் இதுவரை இரு ஆட்டங்களிலும் விளையாடியுள்ளன. இரண்டு அணிகளும் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளன. 

இன்று 10 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெயிக்வாட், தொடர்ந்து அதிக ரன்கள் எடுக்காமல் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க பவர்பிளேயில் சிஎஸ்கே தடுமாறியது. முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு ராயுடுவும் மொயீன் அலியும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். 13 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து நல்ல நிலைமையில் இருந்தது சிஎஸ்கே. இதன்பிறகு நிலைமை மாறியது. ராயுடு 27 ரன்களிலும் மொயீன் அலி 48 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். ஷிவம் டுபே, தோனி தலா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் சிஎஸ்கே தடுமாற ஆரம்பித்தது. இன்று 2 விக்கெட்டுகள் எடுத்த நடராஜனின் கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார் ஜடேஜா. எனினும் கடைசி ஓவரில் 23 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.
 

முழு கட்டுரையைப் படிக்க →