லக்னெள அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது.
167 ரன்களை விரட்டிய சென்னை அணி, பவர் பிளேவுக்கு பிறகு பவுண்டரி அடிக்க திணறிக் கொண்டிருந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி, தனது அதிரடியால் வெற்றி இலக்கை எட்ட உதவினார்.
11 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என மொத்தம் 26 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறத்தில் ஷிவம் துபே 37 பந்துகளில் 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சாதனைகள்...
அதிரடியாக ரன் குவித்தது மட்டுமின்றி, ஸ்டம்பிங் மற்றும் ரன்-அவுட் செய்து லக்னெள வீரர்களின் ரன் குவிப்பை இறுதி நேரத்தில் கட்டுப்படுத்த உதவிய காரணத்துக்காக தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன்மூலம் ஆட்டநாயகன் விருதை பெற்ற மிகவும் வயதான வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார்.
ஐபிஎல்லில் ஆட்டநாயகன் விருது பெற்ற வயதான வீரர்கள்
43 வயது 280 நாள்கள் - தோனி - 2025
42 வயது 208 நாள்கள் - பிரவின் தாம்பே - 2014
42 வயது 198 நாள்கள் - பிரவின் தாம்பே - 2014
கேப்டனாக 17 முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்று தோனி முதலிடத்தில் உள்ளார்.
மேலும், சென்னை அணியின் கேப்டனாக 16வது முறையாக ஆட்டநாயகன் விருதை தோனி பெற்றுள்ளார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு தில்லி அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை பெற்ற தோனி, சுமார் 2,175 நாள்களுக்கு பிறகு மீண்டும் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுமட்டுமின்று ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் (ஸ்டம்பிங், கேட்ச், ரன் அவுட்) வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.