ஒலிம்பிக்ஸ்

ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா!

DIN

 
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது இந்திய அணி. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் பதக்கத்தை வென்று வரலாற்றை உருவாக்கியுள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் வியாழக்கிழமை மோதின. ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெர்மனி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. 

போட்டி தொடக்கத்தில், ஜெர்மனிக்கு முதல் கோல் அடித்து டைமுர் முன்னிலை கொடுத்தார். ஆனால், அதனை தொடர்ந்து இந்தியாவின் சிம்ரன்ஜித் சிங் இந்தியாவுக்காக முதல் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். போட்டி சமனான அடுத்த நில நிமிடங்களில், ஜெர்மனிக்கு அடுத்தடுத்து இரண்டு கோல்கள். 3-1 என ஜெர்மனி முன்னிலை பெற்ற போது, கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி போராடியது. அப்போது, இந்தியாவின் ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் இந்தியாவுக்கு இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தனர். முதல் பாதி முடிவில், 3-3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் காலிறுதியில்,  சுதாரித்து ஆடிய இந்தியா 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது, இதனால், ஜெர்மனிக்கு சிக்கலானது. 2 கோல்கள் வித்தியாசத்தில் இந்தியா 5-3 என்று முன்னிலை பெற்றிருந்த நிலையில், கடைசி காலிறுதி தொடங்கியது. கோல் அடிக்க முற்பட்டு ஜெர்மனியும், தடுப்பாட்டத்தை முழு வீச்சில் வெளிப்படுத்திய இந்திய அணியும், போட்டியை வெல்ல களத்தில் போராடியது.

48 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜெர்மனி கோல் அடித்தது. இதனால், 4-5 என சம நிலையை நெருங்கியது ஜெர்மனி. கடைசி 15 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது. கடைசி நிமிடம் வரை ஜெர்மனி அணி கோல் அடிக்க போராடியது, முன்னிலையை தக்க வைக்க இந்திய அணி நிதானமாக போராடியது. போட்டியின் முடிவில், 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி போட்டியை வென்று அசத்தியது. 

இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியில் 1980 ஆம் ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. 

இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற எந்தவொரு ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை. அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டி இல்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972 ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.  ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஹாக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும்.

இதையடுத்து இந்தியாவுக்கு தற்போது 3 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT