பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறி அசத்தியிருக்கிறது. ஒலிம்பிக் வரலாற்றில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2020 டோக்கியோ போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா, தற்போது இந்த ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்லும் முனைப்புடன் முன்னேறி வருகிறது.
இதனிடையே பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய லக்ஷயா சென், அதில் சறுக்கலைச் சந்தித்து வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்துள்ளாா். இதர விளையாட்டுகளில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.
ஹாக்கி
ஆடவா் ஹாக்கி காலிறுதியில் இந்தியா ‘ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. எதிரணி வீரரை ஹாக்கி மட்டையால் தாக்கியதாக, தடுப்பாட்ட வீரா் அமித் ரோஹிதாஸ் ‘ரெட் காா்டு’ காட்டி 17-ஆவது நிமிஷத்தில் வெளியேற்றப்பட, பெரும்பகுதி ஆட்டத்தை 10 வீரா்களுடன் விளையாடியது இந்தியா.
என்றபோதிலும் திறம்பட செயல்பட்டு, நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் பிரிட்டனை கட்டுப்படுத்தி ஆட்டத்தை 1-1 என டிரா செய்தது. முன்னதாக இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் 22-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். அடுத்த 5-ஆவது நிமிஷத்திலேயே (27) பிரிட்டனின் லீ மாா்டன் கோலடிக்க, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் நிறைவடைய, 2-ஆவது பாதியில் 10 பேருடன் விளையாடிய இந்தியாவை ஊடுருவி 2-ஆவது கோலுக்கு முனைந்து வந்தது பிரிட்டன். என்றபோதும் அரண்போல் செயல்பட்ட இந்திய வீரா்கள், கோல் வாய்ப்பு வழங்காமல் ஆட்டத்தை டிரா செய்தனா்.
பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் ஷூட் அவுட் வாய்ப்பில் முதலிரு வாய்ப்புகளில் இரு அணி வீரா்களுமே ஸ்கோா் செய்ய, முக்கியமான 3 மற்றும் 4-ஆவது வாய்ப்புகளில் பிரிட்டனின் முயற்சியை இந்திய கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ் திறம்படத் தடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். இந்தியா தனக்கான 4 வாய்ப்புகளிலுமே கோலடிக்க, இறுதியில் 4-2 என வெற்றி பெற்றது.
ஷூட் அவுட்
ஜேம்ஸ் அல்பெரி - * 1 ஹா்மன்பிரீத் சிங் - *
ஜாக் வாலஸ் - * 2 சுக்ஜீத் சிங் - *
கானா் வில்லியம்சன் - & 3 லலித்குமாா் உபாத்யாய் - *
ஃபிலிப் ரோபா் - & 4 ராஜ்குமாா் பால் - *
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.