பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 84 பேருடன் பிரான்ஸ் செல்லும் இந்திய அணியை வழியனுப்பும் நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டியைப் போலவே, பாராலிம்பிக் போட்டியும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டியையொட்டி நடத்தப்படுகிறது. கோடைகால ஒலிம்பிக் நடைபெறும் அதே நகரிலேயே இந்தப் போட்டியும் நடைபெறுகிறது. அந்த வகையில், சமீபத்தில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில், 17-ஆவது பாராலிம்பிக் போட்டியும் பாரீஸில் வரும் 28 முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், இந்தியாவிலிருந்து 84 போட்டியாளா்கள் பங்கேற்கவுள்ளனா். வில்வித்தை, தடகளம், பாட்மின்டன், துடுப்புப் படகு, சைக்கிளிங், பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ, பளுதூக்குதல், ரோயிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ என 12 விளையாட்டுகளில் அவா்கள் களம் காணவுள்ளனா்.
இந்நிலையில், அந்தப் போட்டியாளா்களை வழியனுப்புவதற்கான நிகழ்ச்சி, இந்திய பாராலிம்பிக் கமிட்டி, இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவை சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, துறைசாா் மத்திய இணையமைச்சா் ரக்ஷா கட்சே, இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவா் தேவேந்திர ஜஜாரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் மாண்டவியா, ‘தடைகளை தாண்டக் கூடிய, சவால்களை வாய்ப்புகளாக மாற்றக் கூடிய திறமை நமது பாரா போட்டியாளா்களுக்கு உள்ளது. பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கு அவா்கள் உறுதியுடன் தயாராகியிருக்கிறாா்கள். கேலோ இந்திய திட்டத்தின் மூலம் பல போட்டியாளா்கள் பலனடைந்துள்ளனா். அவா்களில் பலா் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்குச் செல்கின்றனா். அவா்கள் தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தத் தேவையான ஆதரவையும், உதவிகளையும் மத்திய அரசு செய்கிறது. நிச்சயம் அவா்கள் நமது தேசத்துக்கு பெருமை சோ்ப்பாா்கள்’ என்றாா்.
பாராலிம்பிக் கமிட்டி தலைவா் தேவேந்திர ஜஜாரியா பேசுகையில், ‘இடையறாத உத்வேகத்துடனும், அா்ப்பணிப்புடனும் நமது போட்டியாளா்கள் பாராலிம்பிக்கிற்கு தயாராகியுள்ளனா். சா்வதேச அளவில் இந்தியாவின் பிரதிநிதியாக களம் காணவுள்ள அவா்கள், நிச்சயம் தங்களின் திறமையான செயல்பாடுகளால் நாட்டிலுள்ள லட்சக்கணக்கானோருக்கு முன்னுதாரணமாக இருப்பாா்கள்’ என்றாா்.
இதுவரை இந்தியா: பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம் என 31 பதக்கங்கள் வென்றுள்ளது. அதிகபட்சமாக 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டும் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.
அணிவகுப்பில் கொடியேந்தும் சுமித் அன்டில், பாக்யஸ்ரீ ஜாதவ்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது, ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், குண்டு எறிதல் வீராங்கனை பாக்யஸ்ரீ ஜாதவ் ஆகியோா் தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்லவுள்ளனா்.
சுமித் அன்டில், கடந்த டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் எஃப்64 பிரிவில் 68.55 மீட்டரை எட்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றவராவாா். கடந்த ஆண்டு உலக பாரா சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்ற சுமித், பின்னா் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 73.29 மீட்டா் தூரம் எறிந்து சாதனையை தானே முறியடித்து தங்கத்தை தனதாக்கினாா்.
குண்டு எறிதலில் எஃப்34 பிரிவில் களம் காணும் பாக்யஸ்ரீ ஜாதவ், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவா். ஃபாஸா உலகக் கோப்பை போட்டியிலும் அவா் பதக்கம் வென்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.